சிங்கப்பூரில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 29) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ‘குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை 2026’ தெரிவிக்கிறது.
பொது விழிப்புணர்வும் கண்காணிப்பு நடைமுறைகளும் வலுவடைந்ததன் காரணமாக கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப் புகார்கள் பெறப்பட்டன என்றும், தேசிய வன்முறை எதிர்ப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசிச் சேவைப் பிரிவிற்கு (என்ஏவிஎச்) வந்த புகார்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 விழுக்காடு கூடி, 16,525ஆகப் பதிவாயின என்று அறிக்கை சுட்டியது.
அதேவேளையில், சமுதாய அமைப்புகளால் கண்காணிக்கப்படும் மிதமான குறைந்த அபாய குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பெரிதும் மாறாமல் 4,686 என்ற அளவில் பதிவானது.
முந்தைய ஆண்டான 2024ல் அத்தகைய 4,527 சம்பவங்கள் பதிவாயின. ஆனால், 2023ம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இது வன்முறை அதிகரித்துவிட்டது என்பதைக் காட்டவில்லை என்றும் இதற்குமுன் வெளியே சொல்லத் தயங்கியவர்கள் இப்போது துணிந்து பேசத் தொடங்கிவிட்டதற்கான அடையாளம் என்றும் கருதப்படுகிறது.
வீடுகளுக்குள்ளேயே மறைந்து கிடந்த குடும்ப வன்முறைகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு சட்ட நடைமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே முதன்மைக் காரணம் என்றும் அறிக்கை சுட்டுகிறது.
இதற்கு நேர்மாறாக, ‘என்ஏவிஎச்’ பிரிவிற்கு வந்த புகார்களின் எண்ணிக்கை கூடியது.
2024ஆம் ஆண்டு 11,068 புகார்கள் வந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 16,525ஆக அதிகரித்தது.
தொலைபேசி வழியாக வந்த புகார்களின் எண்ணிக்கை மட்டும் 9,153ல் இருந்து 14,083ஆக அதிகரித்தது.
மேலும், 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், சிறார் அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடிய பெரியவர் தொடர்புடைய குடும்ப வன்முறைச் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் காவல்துறையினர், அதுபற்றி உடனே ‘என்ஏவிஎச்’ பிரிவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை நடப்பிற்கு வந்தது.
இதன் விளைவாக, சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் ஒரே ஆண்டில் மும்மடங்கிற்கும் மேலாக, அதாவது, 941லிருந்து 2,850ஆக அதிகரித்ததாகவும் குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை குறிப்பிட்டது.
இதன் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை, சமுதாய அமைப்புகளும் கல்வித் துறையினரும் அதிக விழிப்புணர்வுடன் புகாரளிக்கத் தொடங்கியுள்ளதால், உதவி தேவைப்படுவோரைத் தொடக்க நிலையிலேயே அடையாளம் காண முடிவதாகச் சுட்டியது.
மேலும், உயிருக்கு ஆபத்தான அல்லது தீவிர அச்சுறுத்தல் நிறைந்த இக்கட்டான சூழல்களில் விரைந்து செயலாற்றும் குடும்ப வன்முறை அவசரகாலச் செயல்பாட்டுக் குழுவின் (டிவிஇஆர்டி) நடவடிக்கைகள் தீவு முழுவதும் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இக்குழுவின் செயல்பாடு தீவின் ஏழு காவல் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில் அக்குழு 1,439 அவசர அழைப்புகளுக்கு நேரில் சென்று தீர்வுகண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உடனடிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த ஆண்டில் அக்குழு 1,151 அவசரகால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில் 59 விழுக்காட்டு உத்தரவுகள் பாதிக்கப்பட்டோரின் கணவன்மார்களுக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
இப்புள்ளிவிவரங்கள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சு, புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சமூகத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டதைக் குறிக்கவில்லை என்றும், மாறாக வன்முறையைக் கண்டறிந்து முளையிலேயே தடுக்கும் கட்டமைப்பு மேம்பட்டிருப்பதையே காட்டுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
“வன்முறை எங்கு நடந்தாலும் அதனைத் தட்டிக்கேட்கவும் புகாரளிக்கவும் பொதுமக்கள் தயங்குவதில்லை என்பதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. அதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் கண்காணிப்பும் பயனளித்துள்ளன,” என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
