தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருந்தகம் திறந்திருக்கும் ஆனால் மருத்துவர்கள் இருப்பதில்லை: தெங்கா வட்டாரவாசிகள்

2 mins read
c5789e73-4c8a-4fa6-afb8-cfbb0f548a6f
2024 ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட “மின்மெட்” மருந்தகம் - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

தெங்கா வட்டாரத்தின் முதல் மற்றும் ஒரே மருந்தகமான “மின்மெட்” கிளினிக்கில் பார்வையாளர்கள் நேரத்திலும் சில நேரம் மருத்துவர் இல்லாததால், தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியுள்ளதாகப் புகார் கூறியுள்ளனர் அவ்வட்டாரவாசிகள்.

சில சந்தர்ப்பங்களில், “மின்மெட்” மருந்தகத்தின் ஊழியர்கள், மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையின் செயலிமூலம் பொது மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகாதார ஆலோசனைகளைப் பெற தங்களிடம் கூறியதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்.

இது தொடர்பாகக் கருத்துரைத்தார் திரு டீ என்று மட்டுமே அறியப்பட விரும்பிய ஓர் குடியிருப்பாளர்.

அவர் இந்த ஆண்டு மட்டும் தாம் மூன்று முறை மருந்தகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகச் சொன்னார்.

இதனால் ஏறத்தாழ 10 நிமிடங்கள் நடந்து புக்கிட் பாத்தோக்கில் உள்ள மருந்தகத்திற்கு செல்ல நேரிட்டதாக விவரித்துள்ளார் திரு டீ.

மற்றொரு குடியிருப்பாளரான 39 வயதான திரு. நிக்கலஸ் ஃபூ, ஜூன்  மாதம் மாலை தமக்கு பணி முடிந்ததும் மருத்துவரைச் சந்திக்க நேரம் கேட்டு மருந்தகத்தைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த மருத்துவரும் இருக்க மாட்டார்கள் என்று தம்மிடம் கூறப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

சரக்குகள் கையாளும் துறையில் பணியாற்றும் திரு ஃபூ  தாம் அருகில் வசிப்பதால் அடிக்கடி அந்த மருந்தகத்தை கடந்து செல்வதாகக் குறிப்பிட்டார்.

என்றபோதும் பல நேரங்களில், பார்வையாளர் நேரம் என்ற அறிவிப்புப் பலகை இருந்தபோதும் அந்த மருந்தகம் மூடப்பட்டிருந்ததை தாம் கவனித்துள்ளதாக மேலும் தெரிவித்தார் அவர்.

கூகல் பக்கத்தில் கருத்துகள் பதிவிடும் அநேக மதிப்பாய்வாளர்களும் அந்த மருந்தகத்திற்குச் சென்றபோது மருத்துவர்கள் அங்கு இல்லை எனப் புகார் கூறுகின்றனர்.

மாதம் $35,999 என்ற வாடகை விலையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வாரிய ஒப்பந்தப் புள்ளியை வென்ற மின்மெட் மருந்தகம் 2024 ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.

தற்போது, ​​வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை அது திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தப் புகார் தொடர்பில் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ‘மின்மெட்’  தலைமை நிர்வாகி எரிக் சியாம், மருந்தகம் முதலில் திறக்கப்பட்டபோது “உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பில் பல்வேறு  பிரச்சினைகளை எதிர்கொண்டது,’’ என்று கூறியிருக்கிறார்.

‘‘இவை 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெரும்பாலும் சரி செய்யப்பட்டன; எனினும் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் அத்தகைய இடர்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டன,’’ என்றும் அவர் கூறினார்.

மருந்தகத்தில் தற்போது அங்கிருக்கும் மருத்துவர் உட்பட போதுமான ஊழியர்கள் உள்ளனர், என்றும்  திங்கட்கிழமை காலை, பணியில் இரண்டு மருத்துவர்கள் உள்ளனர் என்றும் மருத்துவர் சியாம் தெரிவித்திருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்