எட்டுத்திக்கும் எதிரொலித்த பறை இசை

எட்டுத்திக்கும் எதிரொலித்த பறை இசை

3 mins read
பாரம்பரியத் தமிழ்த் தாளக் கருவி இசையை உள்ளூர் மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்க்கும் நோக்குடன் ‘சிங்க இடி’ திட்டம் தொடக்கம்
21cf40ba-bfd3-4ba0-8119-7421552e92d8
‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

சிங்கப்பூரின் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது ‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சி.

பாரம்பரியத் தமிழ்த் தாள இசையில் தனி முத்திரை பதித்துள்ள ‘டமாரு’ அமைப்பின் 10ஆம் ஆண்டுநிறைவு விழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் அமைந்துள்ள ஃபெஸ்டிவ் ஆர்ட்ஸ் தியேட்டரில் அரங்கேறியது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘ஃபெஸ்டிவ் ஆர்ட்ஸ் தியேட்டர்’இல் ‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க வந்திருந்தோர்.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘ஃபெஸ்டிவ் ஆர்ட்ஸ் தியேட்டர்’இல் ‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க வந்திருந்தோர். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சியில் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸுடன் (வலமிருந்து மூன்றாமவர்), நற்பணிப் பேரவை, மக்கள் கழகம், சிண்டா, லிஷா ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
‘டமாரு பஜே எக்ஸ்’ இசை நிகழ்ச்சியில் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸுடன் (வலமிருந்து மூன்றாமவர்), நற்பணிப் பேரவை, மக்கள் கழகம், சிண்டா, லிஷா ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

‘டமாருகம்’, ‘ரங் தே’, ‘பாங்ரா டோல்’, ‘நாசிக் டோல் தாஷா’, தமிழர்களின் தொன்மையான ‘பறை’ எனப் பலவிதத் தாளக் கருவிகளின் இன்னிசை அரங்கை நிறைத்தது.

‘அச்சந்தவிர்’ அங்கத்தில் டமாரு கலைஞர்கள்.
‘அச்சந்தவிர்’ அங்கத்தில் டமாரு கலைஞர்கள். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றிணைந்து பறை இசைக்கருவியை வாசித்தார்கள்.

‘தில்லேலே’ அங்கத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றிணைந்து பறை இசைக்கருவியை வாசித்தனர்.
‘தில்லேலே’ அங்கத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒன்றிணைந்து பறை இசைக்கருவியை வாசித்தனர். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

வேகம் குறைந்தும் கூடியும் ஒலித்த தாளக் கருவிகளின் இசை பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைத்தது.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் பறை இசைக்குழுவினருடன் ‘டிரம் ஃபெங்’ எனும் சீனத் தாளக்கருவிக் குழுவும் ‘நாடி சிங்கப்பூரா’ எனும் மலாய் தாளக்கருவிக் குழுவும் இணைந்து வழங்கிய படைப்பு பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது.

டோல் இசைக்கருவியுடன் ‘டிரம் ஃபெங்’ சீன தாளக்கருவிக் குழுவும், ‘நாடி சிங்கப்பூரா’ மலாய் தாளக்கருவிக் குழுவும் இணைந்து வழங்கிய கலாசாரப் படைப்பு அங்கம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
டோல் இசைக்கருவியுடன் ‘டிரம் ஃபெங்’ சீன தாளக்கருவிக் குழுவும், ‘நாடி சிங்கப்பூரா’ மலாய் தாளக்கருவிக் குழுவும் இணைந்து வழங்கிய கலாசாரப் படைப்பு அங்கம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. - படம்: விஜய் ஆனந்த் அஜய்

‘சிங்க இடி’ திட்டம் தொடக்கம்

நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ‘சிங்க இடி’ சமூகத் திட்டத்தைக் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தொடங்கிவைத்தார்.

தென்கிழக்கு வட்டார மேயருமான அவர், டமாரு குழுவினருடன் இணைந்து மேடையில் பறை இசைக்கருவியை வாசித்தார்.

பாரம்பரியத் தமிழ்த் தாளக் கருவி இசையை உள்ளூர் மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதன்மை இலக்கு, சமூக மன்றங்கள், கல்வி நிலையங்களுடன் இணைந்து பறை இசை ஆர்வலர் குழுக்களை உருவாக்குவதாகும்.

‘டமாரு’ கலை அமைப்பின் ‘பரம்பரை’ பாடத்திட்டத்தின் வழிகாட்டுதலோடு, பயிற்சிபெற்ற கலைஞர்கள் புதியவர்களுக்குப் பயிற்சி அளிப்பர்.

இவ்வாண்டில் 100 புதிய உறுப்பினர்களை இணைக்க இலக்கு

தற்போது உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, கெபுன் பாரு சமூக மன்றம் ஆகியவற்றுடன் ‘டமாரு’ அமைப்பு கைகோத்துள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிதாக இரு கல்வி நிலையங்கள், இரு சமூக மன்றங்களில் இக்குழுக்களை உருவாக்கி, புதிய உறுப்பினர்கள் 100 பேரை இணைக்க இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

இளையர்களைப் பயிற்றுவிப்பாளர்களாகவும் கலைத்துறைத் தலைவர்களாகவும் உயர்த்துவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்). அவருடன் டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (இடது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்). அவருடன் டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (இடது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

தமிழ்த் தாளக் கருவிகளை ரசிக்கவும் உணரவும் வைத்த நிகழ்ச்சி

“இத்தகைய நிகழ்ச்சிகளின் வாயிலாகத் தமிழர்களின் பாரம்பரியத் தாளக் கருவிகள், நடனக் கலைகளை உணர்ந்து உள்வாங்க முடிகிறது,” என்றார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தாதியான 23 வயது ஜனனி.

வருங்காலத் தலைமுறையினர் தமிழ்த் தாளக் கருவிகளை ரசிக்கவும் கற்றுக்கொள்ளவும் இந்த இசையை உயிர்ப்புடன் பேணவும் இத்தகைய திட்டம் உதவும் என்றார் அவர்.

தமிழ்த் தாளக் கருவிகள் மீதிருந்த ஈர்ப்பால் அதனை முறையாகக் கற்க விரும்பி, கடந்த மூன்றாண்டுகளாக ‘டமாரு’ அமைப்பில் பறையாட்டம் பயின்று வருகிறார் 38 வயது ரோஷினி கணேசன்.

“இவ்விழா சமூகத்தை ஒன்றிணைக்கிறது. பலரைத் தமிழ்த் தாளக் கருவிகளைக் கற்கவும் பண்பாட்டின் ஓர் அங்கமாக்கவும் இது உந்துசக்தியாக அமையும்,” என்று அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு முதல் ‘டமாரு’ அமைப்புடன் இணைந்து செயலாற்றும் 29 வயது தக்‌ஷா மோகன், பாரம்பரியத் தமிழ்த் தாளக் கருவிகளுடன் மேற்கத்தியத் தாளக் கருவிகளையும் வாசிப்பதில் அனுபவம் பெற்றவர்.

டமாரு கலை அமைப்பின் தாளக் கருவிக் கலைஞர் தக்‌ஷா மோகன், 29, (இடது) தமிழ் முரசு செய்தியாளர் சித்தார்த் பிள்ளையுடன் (20)  உரையாடினார்.
டமாரு கலை அமைப்பின் தாளக் கருவிக் கலைஞர் தக்‌ஷா மோகன், 29, (இடது) தமிழ் முரசு செய்தியாளர் சித்தார்த் பிள்ளையுடன் (20) உரையாடினார். - படம்: விஜய் ஆனந்த் அஜய்

பறை குறித்த பார்வை மாறும்

பறை கற்றுக்கொண்டது தமது உண்மையான இசை அடையாளத்தைக் கண்டறிய உதவியதாகவும் அது தற்போது தம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

“பறை என்பது இறப்புச் சடங்குகளுக்கு மட்டுமே உரித்தான தாளக் கருவி என்ற தவறான கண்ணோட்டத்தை இத்தகைய நிகழ்ச்சியும் திட்டங்களும் மாற்றும்,” என்று குறிப்பிட்டார் திருவாட்டி தக்‌ஷா.

“உலகின் ஆதி நாதமாகக் கருதப்படும் இந்த இசை, மங்கல நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரியது என்பதை மக்கள் இதன் மூலம் உணர்ந்துகொள்வார்கள்,” என்று கூறினார் டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

குறிப்புச் சொற்கள்