மணிலா: தென்சீனக் கடலுக்கு மேலுள்ள வான்வெளியில் சீனக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பறந்ததை அடுத்து, அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தென்சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு மேல் உள்ள வான்வெளியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிலிப்பீன்ஸ் அரசு விமானத்துக்கு அது ஆபத்து விளைவித்ததாக அமெரிக்கா சாடியது.
சீனக் கடற்படைக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் அபாயகரமான முறையில் பறந்ததாக பிலிப்பீன்சுக்கான அமெரிக்கத் தூதர் மேரிகே கார்ல்சன் புதன்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்தார்.
தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் கருத்து வேற்றுமைகளுக்கு அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் சீனாவிடம் வலியுறுத்தினார்.
சீனக் கடற்படையின் நிபுணத்துவமற்ற, பொறுப்பற்ற செயல்கள் குறித்து பிலிப்பீன்ஸ் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) கவலை தெரிவித்தது.
இதுகுறித்து அரசதந்திர முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அது கூறியது.
சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனது விமானத்துக்கு மிக அருகில் சீனக் கடற்படை ஹெலிகாப்டர் பறந்ததாக பிலிப்பீன்ஸ் கடற்படை தெரிவித்தது.
இதனால் தனது விமானிகள், பயணிகள் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக அது கூறியது.