சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தைச் சேர்ந்த மூத்தோர் கிட்டத்தட்ட15 பேர், ஜனவரி 21ஆம் தேதி தங்கள் ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’யைப் (SG Culture Pass) பயன்படுத்தி, ஓவியப் பயிலரங்கில் பங்கேற்பர்.
இந்த முன்னோடிக் கலைத் திட்டம் தாதிமை இல்லங்களை ஈடுபடுத்துவதற்கான கலாசார, சமூக, இளையர் அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி முயற்சியாகும்,
இதன்மூலம் நடமாட்டச் சவால்களை எதிர்கொள்பவர்கள் தங்கள் ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’யைப் பயன்படுத்தி உள்ளூர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.
அமைச்சும், ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பும் தொடர்ந்து இது போன்ற பல திட்டங்களைத் தாதிமை இல்லங்களுக்குச் செயல்படுத்த உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
ஆங்கிலத்தில் 90 நிமிட பயிலரங்கை நடத்துவோருக்கு, தாதிமை இல்லவாசிகளுடன் இணைந்து பணியாற்றும்போது கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கவும் பொறுமையாக இருக்கவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“இல்லவாசிகளை நிகழ்ச்சி நடத்துநர்களாக உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். பயிற்சியை முடித்தவர்கள் இல்லத்தில் அத்தகைய நடவடிக்கைகளில் தங்கள் சகாக்களை வழிநடத்தத் தயாராக இருப்பார்கள்,” என்று ஸ்ரீ நாராயண மிஷனின் திட்ட நிர்வாகி திருமதி ரேஷ்மா தாசிம் கூறினார்.
முன்னோடித் திட்டத்தில், பயிற்றுவிப்பாளருக்கு ஆதரவளிக்கும் உதவியாளர்கள், பங்கேற்பாளர்களிடம் அதிக தனிப்பட்ட கவனம் செலுத்துவார்கள்.
மூத்தோரின் உடல் ஆற்றல், செயல்பாட்டுத் திறன்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட பல்வேறு கருவிகளையும் இந்தக் குழு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள், சமூக நிலையங்கள், தாதிமை இல்லங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கும் வெளிப்புறக் குழு நடவடிக்கைகளில் 800க்கும் மேற்பட்ட மூத்தோர் பங்கேற்றதாகக் கலாசார, சமூக, இளையர் அமைச்சு தெரிவித்தது.
மேலும், உடற்குறையுள்ளோர் பங்கேற்கக்கூடிய வகையில் போதுமான நிகழ்ச்சிகள் இருப்பதையும் அமைச்சு உறுதிசெய்யும். அவர்கள் கலந்துகொள்ளும் வகையில் 70க்கும் மேற்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’யைப் பெறத் தகுதியுள்ள 3 மில்லியன் பேரில், 1.1 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் அதற்குப் பதிவுசெய்துள்ளனர்.
கிட்டத்தட்ட $10 மில்லியன் மதிப்புள்ள , ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’ 136,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில், 46,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் $100 தொகையை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளதாகக் கலாசார, சமூக இளையர் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துபூர்வமான பதிலில் கூறினார்.
சிங்கப்பூரர்கள் உள்ளூர் நிகழ்ச்சிகள், கண்காட்சிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்கும் நோக்கில், வரவுசெலவுத் திட்டம் 2025ல் அறிவிக்கப்பட்ட ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’ முயற்சிக்காக மொத்தம் $300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூர் குடிமக்கள் அனைவரும் $100 மதிப்புள்ள மின்னிலக்க, ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’யைப் பெறலாம். 2025 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 2028 இறுதி வரை அதனைப் பெறலாம். மேல் விவரங்களை sgculturepass.gov.sg என்ற இணையத்தளத்தில் காணலாம்.

