ஸ்டார்ஹப் நிறுவனத்திடம் வாடிக்கையாளர் தகவலைச் சரிபார்க்கத் தவறியதன் தொடர்பில் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.
நிறுவனத்தின் இ-சிம் அட்டைகளை (Giga e-SIM) வேறொரு கைத்தொலைபேசிக்கு மாற்றக் கோரிய வாடிக்கையாளர்களின் அடையாளங்களை அது சரிபார்க்கத் தவறியதாகக் கூறப்பட்டது.
இதனால் வாடிக்கையாளர் ஒருவரின் தொலைபேசி இணைப்பு ஊடுருவலுக்கு உள்ளானதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. ஊடுருவிகள் அவரது வங்கிக் கணக்குக்கான ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களைக் கொண்ட குறுஞ்செய்திகள் (SMS OTPs) போன்ற தகவல்களைத் திருடினர்.
ஸ்டார்ஹப் நிறுவனத்தின் இணை நிறுவனமான ‘கிகா’, தேவையற்ற கூடுதல் அம்சங்கள் இல்லாமல் அடிப்படை அம்சங்கள் மட்டும் கொண்ட சேவையை வழங்குகிறது.
இதன் தொடர்பில் ஆணையத்தைத் தொடர்புகொண்டபோது, “ஸ்டார்ஹப் அதன் செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம்மை மீண்டும் வழங்கியபோது பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. இதன் தொடர்பில் விசாரணை நடைபெறுகிறது,” என்று கூறியது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சிங்பாஸ் வழியாகவோ அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டையைப் பார்வையிடுவதன் வழியாகவோ பயனாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டியது கட்டாயம். இ-சிம்களை வேறொரு கைத்தொலைபேசிக்கு மாற்றக் கோரும்போதும் இவ்வாறு சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால், நிறுவனத் தரவுத்தளத் தகவல் கசிவு அல்லது மோசடிச் சம்பவங்களின் வாயிலாக பாதிக்கப்பட்ட பயனாளரின் தனிப்பட்ட தகவல்களை ஊடுருவிகள் திருட இயலும் என்பதை வல்லுநர்கள் சுட்டினர்.
சிம் அட்டைகளுக்கு மாற்றான இ-சிம்களைத் தொலை இயக்க முறையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைப்பேசிகளில் பொருத்த இயலும்.