விண்ணில் பாயும் ஏழு சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள்

விண்ணில் பாயும் ஏழு சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள்

2 mins read
78c8b118-a623-4ad0-b2ce-a15b795582aa
விண்ணில் பாய தயாராக இருக்கும் பிஎஸ்எல்வி-சி56 உந்துகணை. - படம்: இஸ்ரோ
multi-img1 of 2

சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு இந்திய உந்துகணை ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் பாயவிருக்கிறது.

இதற்கான நேர நெருங்கலைக் குறிக்கும் ‘கவுன்ட்டௌன்’, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா உந்துகணைத் தளத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.01 மணிக்குத் தொடங்கிவிட்டது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘ஐஏஎன்எஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஏழு செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டுள்ள ‘பிஎஸ்எல்வி-சி56’ உந்துகணை ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

‘பிஎஸ்எல்வி-சி56’ உந்துகணையில் பொருத்தப்பட்டுள்ள சிங்கப்பூரின் ‘டிஎஸ்-எஸ்ஏஆர்’ எனும் செயற்கைக்கோளே ஆகப் பெரியது. அது 360 கிலோ எடைகொண்டது.

மற்ற ஆறு செயற்கைக்கோள்களும் சிறியவை. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்-2, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கேலஸியா-2, நியூஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் நியூலயன், ஏலியனா எனும் தனியார் நிறுவனத்தின் ஆர்ப்-12 ஸ்ட்ரைடர் ஆகியவையே அந்த ஆறு செயற்கைக்கோள்கள்.

இவ்வாண்டில் வணிக ரீதியில் இஸ்ரோ ஏவும் மூன்றாவது உந்துகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியும் வெற்றியடைந்தால், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 431ஆக உயரும். அவை 36 நாடுகளுக்குச் சொந்தமானவை.

கடந்த இரு வாரங்களுக்குள் இஸ்ரோ செலுத்தவிருக்கும் இரண்டாவது உந்துகணை இது.

இம்மாதம் 14ஆம் தேதி, ‘எல்விஎம்-3’ உந்துகணையானது சந்திரயான்-3 விண்கலத்தை அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சந்திரனை ஆய்வுசெய்யும் நோக்கில் அந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ அடுத்ததாக சூரியனையும் குறிவைத்துள்ளது. சூரிய வளிமண்டலத்தை நோக்கி ‘ஆதித்யா எல்1’ எனும் செயற்கைக்கோளைத் தாங்கிய ‘பிஎஸ்எல்வி’ உந்துகணையை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்