தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரிழிவு நோய் உள்ளோருக்கு உதவும் புதிய செயலி

2 mins read
04804add-64ac-44ba-bc2b-fe04b05bc85b
செயலியின் பெயர் எம்பவர். - படம்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்ஹெல்த்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களின் உடல்நலனைப் பேணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கணினியியல் பள்ளி, சிங்ஹெல்த் குழுமம் இரண்டும் இணைந்து புதிய செயலியை உருவாக்கியுள்ளன. எம்பவர் என்றழைக்கப்படும் இச்செயலியைக் கொண்டு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு ஆளானோர் தேவைக்கேற்ப தகுந்த நேரத்தில் முக்கிய அம்சங்களைப் பற்றி நினைவூட்டிக்கொள்ள முடியும்.

சம்பந்தப்பட்டோர் உடல்ரீதியாக தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம். அவை குறித்த தேவையான தகவல்களை எம்பவர் செயலியில் பதிவிட்டு நினைவூட்டிக்கொள்ளலாம்.

உணவுப் பழக்கங்கள், மருந்து உட்கொள்ளும் நேரம் போன்ற தகவல்களை செயலியில் பதிவிடலாம். அவற்றுக்கு ஏற்றவாறு உடல்ரீதியான நடவடிக்கைகள் சார்ந்த இலக்குகளைப் பயனாளர்கள் வரையலாம். இலக்குகளை அடைவதற்கு ஊக்குவிக்கும் வண்ணம் செயலி அவர்களுக்குத் தக்க நேரத்தில் நினைவூட்டும்.

எம்பவர் செயலி, அறிவார்ந்த கைக்கடிகாரம் போன்ற உடலில் அணியக்கூடிய கருவிகளிலிருந்து செயற்கை நுண்ணறிவின் மூலம் தகவல்களை ஆராயும். ஃபிட்பிட் கருவி, ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஹெல்த்’ செயலி ஆகியவற்றுடனும் எம்பவர் செயலியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

கடவுச்சொல், தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்க்கும் முறை (ஆத்தென்டிக்கே‌ஷன்) உள்ளிட்டவற்றின் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். சுகாதார வழிகாட்டிகள், நிபுணர்கள் ஆகியோரைப் பயனாளர்கள் தொடர்புகொள்வதற்கான வசதியும் செயலியில் உண்டு.

2021ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,000 பேரைக் கொண்டு எம்பவர் செயலி சோதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மட்டும் ஆப்பிள், கூவகல் பிளே ஸ்டோர் தளங்களிலிருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்து தரப்பட்டது.

சோதனையின் முதற்கட்ட முடிவுகளை தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு தற்போது ஆராய்ந்து வருகிறது. முதற்கட்ட முடிவுகளை ஆராயும் நடவடிக்கை இறுதி நிலையில் இருக்கிறது.

அதற்குப் பிறகு எம்பவர் செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்