பிரிட்டன் பேராளர் குழுவை மே 9ஆம் தேதி வரவேற்று உபசரித்த சிங்கப்பூர், தடுத்தல், கண்டறிதல், குற்றம் சாட்டுதல் உள்பட மோசடிகளைக் கையாள்வதில் குடியரசின் சில உத்திகளைப் பகிர்ந்து கொண்டது.
மோசடி குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக பிரிட்டனின் உள்துறை பொறுப்புக் குழு பார்வையிட்ட ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே என்று திங்கட்கிழமை (மே 13) வெளியிட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
தற்போதைய பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர், பிரிட்டிஷ் பிரதமரின் மோசடி எதிர்ப்பு வல்லுநர் சைமன் ஃபெல் ஆகியோர் அடங்கிய பேராளர் குழு உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்குடன் சந்திப்பு நடத்தியது.
சமூக, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான திருவாட்டி சுன், ஏற்கெனவே உள்ள மற்றும் புதிய மோசடிகளை திறம்பட முறியடிப்பதற்கு தனியார் துறை பங்குதாரர்களுடன் அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார் என்று உள்துறை அமைச்சு கூறியது.
இதில் சிங்கப்பூர் காவல்துறையின் பணிகளையும், திறன்களையும் அறிந்துகொள்ள அதன் மோசடி எதிர்ப்புப் பிரிவுக்கும் (ஏஎஸ்காம்) பிரிட்டிஷ் குழு வருகையளித்தது.
ஏஎஸ்காம் என்பது வங்கி ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து மோசடி பண பரிமாற்றங்களைக் கண்டறியவும், மோசடி தொடர்பான வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கவும் அமைக்கப்பட்ட பிரிவாகும்.
கடந்த 2023ல், ஏஎஸ்காம் மோசடி தடுப்பு மையத்திற்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் 19,600க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதுடன், $100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசடிகள், பிற இணையக் குற்றங்கள் தொடர்பான சிங்கப்பூரின் சிறந்த நடைமுறைகள் மற்றும் இரு நாட்டு ஒத்துழைப்பு ஏற்ற துறைகள் குறித்து பிரிட்டிஷ் குழுவின் உறுப்பினர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாக மோசடிகள் தொடர்பான அமைச்சுகளுக்கிடையிலான குழுவின் தலைவராக இருக்கும் திருவாட்டி சுன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“மோசடிகளுக்கு சிங்கப்பூர் ஆற்றிய எதிர்வினையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பயணம், எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக பரிந்துரைகளை வடிவமைக்க உதவும்,” என்று எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சின் தேர்வுக் குழுத் தலைவரான டேம் டயானா ஜான்சன் சொன்னார்.
மோசடிகளைக் கண்டறிதல், தடுத்தல், வழக்குத் தொடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற நாடுகள் என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது தங்கள் ஆய்வின் முக்கிய இலக்கு என்றார் அவர்.