லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 விமானத்தில் பயணம் செய்தோரில் சிலர், மாற்று விமானம் மூலம் மே 22ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையத்தில் வந்திறங்கினர்.
பயணப் பைகளை எடுக்குமிடத்திலிருந்து அவர்களில் பெரும்பாலானோரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ஊழியர்கள் வருகையாளர் கூடத்திற்கு வழிநடத்தினர்.
குடும்பத்தினர் அப்பயணிகளை ஆனந்தக் கண்ணீருடன் அணைத்து வரவேற்றனர்.
முன்னதாக, சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம், காற்றின் நிலை சீராக இல்லாததால் கடுமையாக ஆட்டங்கண்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (மே 21) பேங்காக்கில் அவசரமாகத் தரையிறங்கியது.
மியன்மாரின் ஐராவதி ஆற்றுப்படுகைக்குமேல் பறந்துகொண்டிருந்தபோது விமானம் அவ்வாறு பாதிக்கப்பட்டது. விமானி பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் அதை அவசரமாகத் தரையிறக்கினார்.
விமானம் ஆட்டங்கண்டதில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.
அதில் பயணம் செய்த 131 பயணிகளும் 12 சிப்பந்திகளும் மாற்று விமானம் மூலம் அதிகாலை 5.05 மணிக்கு சிங்கப்பூர் வந்துசேர்ந்ததாக மே 22ஆம் தேதி, எஸ்ஐஏ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் அவர்களை வரவேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
விமானத்தில் பயணம் செய்த மேலும் 79 பயணிகளும் சிப்பந்திகள் ஆறு பேரும் பேங்காக்கிலேயே தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவப் பராமரிப்புப் பெறுவோரும், அதே விமானத்தில் பயணம் செய்த அவர்களின் குடும்பத்தினரும் அவர்களில் அடங்குவர்.
மாற்று விமானமான எஸ்கியூ9071, சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.10 மணிக்கு சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கிளம்பியதாக ஃபிளைட்ரேடார்24 தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, மே 21ஆம் தேதி இரவு 9 மணியளவில் அது சாங்கி விமான நிலையத்திலிருந்து பேங்காக் கிளம்பிச் சென்றது.
பயணிகளை கார், பேருந்து நிறுத்துமிடங்களுக்கு வழிநடத்த, மே 22ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு இரண்டாம் முனைய வருகையாளர் கூடத்தில் விமான நிலைய அதிகாரிகள் தடுப்புகளை அமைத்தனர். பயணிகளை வழிநடத்துவதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட கூடத்தின் பாதிப் பரப்பு தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்தது. பயணிகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் பயணி, அதிகாலை 5.15 மணியளவில் வருகையாளர் கூடத்திலிருந்து வெளியேறினார்.
ஒவ்வொரு பயணி அல்லது பயணிகள் குழுவையும் எஸ்ஐஏ ஊழியர் ஒருவர் வழிநடத்தினார். விமான நிலைய அதிகாரிகளும் உதவினர்.
பயணிகள் சிலர் நான்காம் முனையத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறினர். மற்றவர்கள் டாக்சி, கார் நிறுத்துமிடங்களுக்குச் சென்றனர்.
பயணிகளை வீடுகளுக்கோ ஹோட்டல்களுக்கோ அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருப்பதாக எஸ்ஐஏ கூறியது. இணைப்பு விமானங்களில் செல்லவேண்டிய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
விமானத்தில் இருந்தோர்க்கு நேர்ந்த அதிர்ச்சியூட்டும் அனுபவம் குறித்து எஸ்ஐஏ வருத்தமடைவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காணொளியில், தலைமை நிர்வாக அதிகாரி கோ கூறியுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்த 143 பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்தடைந்தது குறித்த தகவல் நிம்மதி அளிப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
“சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் மருத்துவ உதவி வழங்கி, பாதிக்கப்பட்ட பயணிகளையும் சிப்பந்திகளையும் கவனித்துக்கொள்வதன் மூலம் ஆதரவு வழங்கிய தாய்லாந்து அதிகாரிகளுக்கு நன்றி கூறுகிறேன்,” என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த பயணியின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட திரு வோங், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மாண்ட பயணியின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், பெரும்பாலான பயணிகள் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்தடைந்தது குறித்தும் மகிழ்ச்சி அடைவதாகவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரிலும் தாய்லாந்திலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். காயமடைந்தோர் விரைவில் நலம்பெற வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர சிகிச்சையில் இரு சிங்கப்பூரர்கள்
இவ்வேளையில், எஸ்கியூ321ல் பயணம் செய்த மேலும் ஐந்து பயணிகள் மே 22ஆம் தேதி சிங்கப்பூர் திரும்புவர் என்றும் மேலும் ஒரு சிப்பந்தி மே 23ஆம் தேதி வருவார் என்றும் எஸ்ஐஏ தெரிவித்துள்ளது. இன்னும் 58 பேர் பேங்காக்கின் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சிங்கப்பூரர்கள் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஏ நிறுவனத் தலைவர் பீட்டர் சியா, மாண்ட பயணியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். எஸ்கியூ321ல் பயணம் செய்த ஒவ்வொரு பயணிக்கும் சிப்பந்திக்கும் ஆதரவு வழங்க நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.