சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுத் துறை (டிஎஸ்ஐபி) அதிகாரிகள், எஸ்கியூ321 விமானம் தொடர்பில் விசாரிப்பதற்காக பேங்காக் சென்றுள்ளனர்.
மே 21ஆம் தேதி, லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்சின் (எஸ்ஐஏ) போயிங் 777-300இஆர் விமானம், மியன்மாரின் ஐராவதி ஆற்றுப்படுகைக்குமேல் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று கடுமையாக ஆட்டங்கண்டது.
அதையடுத்து மருத்துவ நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக விமானி, தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள டிஎஸ்ஐபி அதிகாரிகள், மே 21ஆம் தேதி இரவு பேங்காக் சென்றதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
விமான, கப்பல், ரயில் விபத்துகள், சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்கு சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சின் டிஎஸ்ஐபி பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.
“இச்சம்பவத்தில் போயிங் விமானம் சம்பந்தப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரிய அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்வர்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
போயிங் நிறுவனம் இச்சம்பவம் தொடர்பில் உதவி வழங்க எஸ்ஐஏவுடன் தொடர்புக்கொண்டிருப்பதாக போயிங் கூறியுள்ளது.
எஸ்கியூ321 விமானப் பயணிகளையும் சிப்பந்திகளையும் வெளியேற்றுவதிலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு வழங்குவதிலும் ஆதரவு நல்கிய தாய்லாந்து அதிகாரிகளுக்கு அமைச்சர் சீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுவதன் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சாங்கி விமான நிலைய அதிகாரிகள், எஸ்ஐஏ ஊழியர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மே 22ஆம் தேதி கூறியுள்ளது.