சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றம் இல்லை: ஆய்வு

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பில் மாற்றம் இல்லை: ஆய்வு

2 mins read
92692561-58be-4953-bb61-0de3ea9fce2f
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி விகிதம் முன்னுரைக்கப்பட்டதைப் போலவே பதிவாகும் என்று தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

எனினும், உற்பத்தி, ஏற்றுமதித் துறைகள்தான் பொருளியல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அவற்றுக்குப் பதிலாக நிதி, காப்புறுதித் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு காலாண்டுக்கும் நடத்தப்படும் கருத்தாய்வில் இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.4 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய கருத்தாய்வில் கணிக்கப்பட்ட விகிதத்தில் மாற்றம் இல்லை.

அதேவேளை, உற்பத்தித் துறை நான்கு விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. அது இப்போது 1.6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆறு விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்த எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் தற்போது நான்கு விழுக்காடே வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாறாக, நிதி, காப்புறுதித் துறை முன்பு கணிக்கப்பட்டதைவிட அதிக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துறை 5.1 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த விகிதம் 3.4 விழுக்காடாக முன்னுரைக்கப்பட்டிருந்தது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 0.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. காலகட்டத்துக்கேற்ப சில அம்சங்களைக் கருத்தில்கொண்ட பிறகு காலாண்டு அடிப்படையில் அந்த வளர்ச்சி விகிதம் பதிவானது.

2023ஆம் ஆண்டு முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 0.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. அதற்குப் பிறகு இவ்வாண்டின் முதல் காலாண்டில்தான் பொருளியல் வளர்ச்சி ஆகக் குறைவாகப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து ஏற்றுமதிகளைத் சார்ந்திருக்கும் சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவாகப் பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் காலாண்டில், காலகட்டத்துக்கேற்ப சில அம்சங்களைக் கருத்தில்கொள்ளும்போது காலாண்டு அடிப்படையில் உற்பத்தித் துறை 5.4 விழுக்காடு சுருங்கியது.

வர்த்தக, தொழில் அமைச்சு, இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி ஒன்றிலிருந்து மூன்று விழுக்காடு பதிவாகும் என்று சென்ற மாதம் கணித்தது.

2023ல் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. 2022ல் பதிவான 3.8 விழுக்காட்டைவிட அந்த விகிதம் குறைவு.

குறிப்புச் சொற்கள்