சுவற்றில் உருவாக்கப்பட்ட, கையில் சிகரெட்டை ஏந்தியபடி உள்ள ‘சம்சுய்’ மாதைச் சித்திரிக்கும் ஓவியத்தில் மாற்றங்கள் செய்வதை ஒத்திவைக்குமாறு அதன் ஓவியரிடம் நகர மறுசீரமைப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஓவியத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆணையம் முடிவெடுப்பதற்காக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
297 சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் இந்த ஓவியத்தில் இடம்பெறும் சிகரெட்டை அழிக்குமாறு நகர மறுசீரமைப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக இணைத்தில் பலர் குரல் எழுப்பியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 21) தெரிவித்தது.
பெயர் தெரிவிக்கப்படாத ஒருவர், ஓவியத்தில் உள்ள ‘சம்சுய்’ மாதை விலை மாதென்று அழைத்தார் என்றும் ஓவியம் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறை கூறியதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
ஓவியத்தில் மாற்றங்கள் செய்ய ஷோன் டன்ஸ்டன் எனும் ஓவியருக்கு ஜூலை மூன்றாம் தேதிவரை கெடு கொடுக்கப்பட்டது. டன்ஸ்டன், சிங்கப்பூரில் இயங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க ஓவியர் ஆவார்.
ஓவியத்தில் மாற்றங்கள் செய்யாவிட்டால் அது இடம்பெற்றுள்ள பகுதியில் அமைந்திருக்கும் யா குன் காயா டோஸ்ட் உணவுக் கடைக்கான தற்காலிக உரிமம் பறிபோகக்கூடும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியிருந்தது.
ஓவியத்துக்கு ஆதரவளித்து ரெடிட் தளத்தில் வலுவான குரல் எழுந்தது. ‘சம்சுய்’ மாதைச் சித்திருக்கும் ஓவியம், வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளதாகப் பலர் ஆதாரங்களை மேற்கோள்காட்டி வாதிட்டனர்.
ஒரு காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் வசித்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதியில் இந்த ஓவியம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது எதிர்ப்பு தெரிவித்தோரின் வாதமாகும்.

