சமூகத்துடன் தொடரும் தமிழ் முரசின் பயணம்

5 mins read
1900417d-f63a-4453-bfa0-06f0897caa22
ஜூலை 6 சனிக்கிழமை தமிழ் முரசின் 89வது பிறந்தநாளை லிட்டில் இந்தியாவிலுள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில் மக்களைச் சந்தித்தது தமிழ் முரசு. - படம்: தமிழ் முரசு

தமிழ் முரசுக்கு இன்று (ஜூலை 6) வயது 89.

தொண்ணூறாவது ஆண்டை நோக்கி இளமைத் துள்ளளோடு வெற்றி நடைபோடுகிறது.

இது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் சாதனை, சிங்கப்பூர் சமுதாயத்தின் சிறப்பு. சிங்கப்பூர் அரசாங்கத்தின் பலம்.

சிங்கப்பூரின் ஏறக்குறைய 6 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டினரே தமிழ் பேசுபவர்கள். 

நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கிறது. தமிழ் படிக்கிறார்கள், புழங்குகிறார்கள். எனினும், செயல்பாட்டு மொழியாக இருக்கும் ஆங்கிலமே முதன்மொழியாக இருக்கும் ஒரு சமூகத்தில் தமிழ்ச் செய்தித்தாள் மேலும் மேலும் வளர்ச்சி காண்பதும் தமிழ் மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாகி இருப்பதும் பெரும் சாதனை.

அச்சுச் செய்தியுடன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் செய்திகளைத் தமிழ் முரசு வெளியிடுகிறது. இணையப் பக்கமும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், வாட்ஸ்அப், டெலிகிராம் என்று சமூக ஊடகப் பக்கங்களும் ஏராள வாசகர்களைப் பெற்றுள்ளன.

எழுத்து வடிவத்தோடு வலையொளியாகவும் காணொளிகளாகவும் செய்திகளை வழங்குகின்றனர் தமிழ் முரசின் தொழில்நுட்பத் திறனும் மொழி ஆர்வமும் கொண்ட செய்தியாளர்கள்.

தமிழ் முரசை திறன்பேசிச் செயலி வழி 20,000க்கும் அதிகமானோர் படிக்கின்றனர், பார்க்கின்றனர். இணையத்தளங்களில் சராசரியாக மாதத்திற்கு 900,000 பேர் முரசு செய்திகளைப் படிக்கின்றனர்.

நாளுக்கு நாள் வளரும் தொழில்நுட்பத்தோடு 90 வயது தமிழ் முரசும் வளர்கிறது. எத்தனையோ சவால்களையும் சாதனைகளையும் கடந்து சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழாக நிலைத்திருக்கும் பெருமை பெற்றது தமிழ் முரசு.

காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்து, வடிவமைத்து, பரிணமித்து வரும் முரசின் பாணியே அதன் வலிமை.

சிலிகி ரோடு அலுவலகத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி.
சிலிகி ரோடு அலுவலகத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி. - படம்: கோ.சாரங்கபாணி குடும்பம்

சீர்திருத்தப் பத்திரிகையாகத் தொடங்கி செய்தித்தாளான தமிழ் முரசு.

பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி 95 ஆண்டுகளுக்கு முன்னர், 1929ல் சிங்கப்பூர் வந்தபோது, இங்கு சீர்திருத்த ஆர்வம் பெருகியது. அ.சி.சுப்பையா, கோ.சாரங்கபாணி, கா. தாமோதரம், கோ. இராமலிங்கம், ஐ.ஐ. நாகலிங்கம் முதலியார் உள்ளிட்ட அன்றைய சமூக அக்கறையாளர்கள் 1932ஆம் ஆண்டு, ஜூலை 22ஆம் தேதி தமிழர் சீர்திருத்தச் சங்கத்தை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்தனர்.

தீண்டாமை- சாதி ஒழிப்பு, ஆண் பெண் சமத்துவம், மதுவிலக்கு, சமூகச் சீர்திருத்தம் ஆகிய கொள்கைகளுடன் செயல்படத் தொடங்கிய தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் பணிமனை 20, கிள்ளான் ரோடு முகவரியில் 1935ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

அன்றும் சனிக்கிழமை. அந்தத் திறப்பு விழாவில் சங்கத்தின் குரலாக தமிழ் முரசு வாரப் பத்திரிகை அறிமுகம் கண்டது.

தமிழ் முரசின் நிறுவனரும் 50 ஆண்டுகளாக அதன் ஆசிரியராகச் செயல்பட்டு, பத்திரிகையை இயக்கமாக வளர்த்தவருமான தமிழவேள் கோ.சாரங்கபாணி
தமிழ் முரசின் நிறுவனரும் 50 ஆண்டுகளாக அதன் ஆசிரியராகச் செயல்பட்டு, பத்திரிகையை இயக்கமாக வளர்த்தவருமான தமிழவேள் கோ.சாரங்கபாணி - படம்: கோ.சாரங்கபாணி குடும்பம்

32 வயதே ஆன கோ.சாரங்கபாணி பத்திரிகையின் ஆசிரியர்.

சனிக்கிழமை தோறும் வெளிவந்த மாலைப் பதிப்பின் விலை ஒரு காசு. முதல் இதழ் நான்கு பக்கம். அடுத்த இதழிலிருந்து எட்டுப் பக்கம். சிறிய அளவு பத்திரிகை. பக்கத்தின் அளவு ஏழுக்குப் பத்து அங்குலம். (இன்றைய A4 தாள் அளவுக்குச் சமம்). தமிழ் முரசு என்று பெயர் வைத்தவர் அ.சி.சுப்பையா என்று சொல்லப்படுவதுண்டு. 

வார இதழாகத் தொடங்கப்பட்ட முரசு, மூன்று மாதங்களிலேயே வாரம் மூன்று முறை வெளிவரத் தொடங்கியது.

சில வாரங்களிலேயே செய்தித்தாளைக் கைவிட சங்கம் முடிவுசெய்தபோது, கோ. சாரங்கபாணியே பத்திரிகையை நடத்தத் தொடங்கினார்.

2.5.1936 முதல் பெரிய அளவில் எட்டுப் பக்கங்களுடன் மூன்று காசு விலையில் வெளிவரத் தொடங்கிய தமிழ் முரசு, 1.12.1937 அன்று நாளிதழ் ஆனது.

அன்றைய தமிழ் முரசின் அச்சு இயந்திரம். அப்போதைய மலேசிய கல்வி அமைச்சர் கிர் ஜொஹாரிக்குத் தமிழ் முரசு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டும் கோ.சாரங்கபாணி. சிங்கப்பூர், மலேசியத் தலைவர்களுடன் நல்லுறவைக் கட்டிக்காத்த கோ.சா. மலேசியப் பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரஸாக் போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருந்தார்.
அன்றைய தமிழ் முரசின் அச்சு இயந்திரம். அப்போதைய மலேசிய கல்வி அமைச்சர் கிர் ஜொஹாரிக்குத் தமிழ் முரசு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டும் கோ.சாரங்கபாணி. சிங்கப்பூர், மலேசியத் தலைவர்களுடன் நல்லுறவைக் கட்டிக்காத்த கோ.சா. மலேசியப் பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரஸாக் போன்றவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டிருந்தார். - படம்: கோ.சாரங்கபாணி குடும்பம்

அன்றைய தமிழ்ச் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப, சீர்திருத்தக் கொள்கையுடன் தொடங்கப்பட்ட தமிழ் முரசு குறுகிய காலத்திலேயே மாற்றம் கண்டது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செய்திப் பத்திரிகையாகவே முரசு நடைபெறும் என்று கோ.சா அறிவித்தார்.

செய்திப் பத்திரிகையாகவும் மொழியும் இலக்கியமும் வளர்க்கும் இதழாகவும் முரசு ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

சிங்கப்பூரில் நிலைபெற்று வேரூன்றிய தமிழ்ச் சமூகத்தின் மொழி, இலக்கிய தேவைகளுடன் சமூகத் தேவைகளையும் நிறைவேற்றும் கூர்கருவியாக முரசைப் பயன்படுத்தினார் தமிழவேள் கோ.சாரங்கபாணி.

அவர் காலத்துக்கு முன்னர் பல பத்திரிகைகள் தோன்றி சில காலத்திலேயே மறைந்துபோன நிலையில், நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய பத்திரிகையாக முரசை உருவாக்கியவர் அவர்.

பல நிலைகளிலும் அல்லல்பட்டுக்கொண்டிருந்த சமூகமே தமிழவேள் கோ.சாரங்கபாணிக்குத் தோள் கொடுத்தது.

இந்நாட்டுத் தமிழ் மக்களின் மீது அக்கறைகொண்டு, அவர்கள் தேவைகளை எடுத்துச்சொல்லி, அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களது போக்குகளை நெறிப்படுத்தி, சமூகத்தில் கவனம் செலுத்தும் சமூகக் குரலாக ஒலித்ததே முரசின் அசைக்க முடியாத வலிமை.

1974ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணியின் மறைவுக்குப் பின்னர், சரியான தலைமைத்துவம், வழிகாட்டுதல், அனுபவம் போன்றவை இன்றி திண்டாடிய பத்திரிகையை, பல சிக்கல்களுக்கிடையே ஏறக்குறைய 20 ஆண்டுகள் அவரது குடும்பத்தினர் பாதுகாத்தனர்.

அதன் பின்னர் 1995ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் ஆங்கிலம், சீனம், மலாய் நாளிதழ்களை நடத்தும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸிடம் தமிழ் முரசையும் அவர்கள் ஒப்படைத்தனர். 

பழைய அச்சுக்கோக்கும் முறை. வலது கோடியில் இருப்பவர் தமிழ் முரசில் 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் நீண்ட கால ஊழியர் எம்.நடராசன்.
பழைய அச்சுக்கோக்கும் முறை. வலது கோடியில் இருப்பவர் தமிழ் முரசில் 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் நீண்ட கால ஊழியர் எம்.நடராசன். - தமிழ் முரசு கோப்புப் படம்

தமிழ் முரசு தொடர்ந்து நீடிக்கும், மேம்பட்டு வளரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 2.11.1995 முதல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் பத்திரிகையாக தமிழ் முரசு வெளிவரத் தொடங்கியது.

அச்சுக்கோக்கும் முறையிலிருந்து கணினிக்கு மாறிய முரசு, தொழில்நுட்பத்திலும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பல மாற்றங்களையும் மேம்பாடுகளையும் காண. பெருநிறுவன இணைப்பு உதவியது. 

1990ல் அச்சுக்கோக்கும் முறையில் இருந்து கணினிக்கு மாறியது தமிழ் முரசு. 1991ல் தமிழ் முரசின் அத்தனை பக்கங்களும் கணினி அச்சில் வெளிவரத் தொடங்கின. 1991ல் எண் 1, ஜென்டிங் லேனில் இருந்த தமிழ் முரசு அலுவலகத்தின் தமிழ் முரசின் முதல் கணினி அறை.
1990ல் அச்சுக்கோக்கும் முறையில் இருந்து கணினிக்கு மாறியது தமிழ் முரசு. 1991ல் தமிழ் முரசின் அத்தனை பக்கங்களும் கணினி அச்சில் வெளிவரத் தொடங்கின. 1991ல் எண் 1, ஜென்டிங் லேனில் இருந்த தமிழ் முரசு அலுவலகத்தின் தமிழ் முரசின் முதல் கணினி அறை. - தமிழ் முரசு கோப்புப் படம்

இன்று அரசாங்கத்தின் ஆதரவில், சிங்கப்பூரின் மற்ற நாளிதழ்களுடன் தமிழ் முரசும் வீறு கொண்டு ஒலிக்கிறது.

ஒரு காசு பத்திரிகையாக முரசு தொடங்கப்பட்டபோது, அதைத் தோளில் சுமந்து வீடு வீடாக விற்று வளர்த்த மக்கள் இன்று தமிழ் முரசை விரல் அசைவில் உலகமெங்கும் பரவச் செய்கின்றனர்.

இத்தனை ஆண்டு கால வரலாற்றில் தமிழ் முரசு பல ஏற்றங்களைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில், 1950களில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவெங்கும் அதிகளவில் விற்பனையான தமிழ்ப் பத்திரிகையாகக் கோலோச்சியது. சிங்கப்பூர், மலேசியாவெங்கும் தமிழர் திருநாள் கொண்டாடி, தமிழர்களை மொழியால் இணைத்தது. செய்திகளை வழங்குவதற்கு அப்பால், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பங்காற்றியது. இக்காலத்திலும் செயலி தொடங்கப்பட்ட எட்டு மாதங்களிலேயே 20,000க்கும் அதிகமானோரின் திறன்பேசிகளில் குடியேறி சாதித்துள்ளது.

இறக்கங்களையும் தமிழ் முரசு எதிர்கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் காலத்திலும் ஊழியர் வேலை நிறுத்தத்தின்போதும் (1963-1964) தமிழ் முரசு தடைப்பட்டது. கோ.சாவின் மறைவுக்குப் பின்னர் விற்பனை மெல்ல மெல்ல சரிந்தது. தற்காலத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் மின்னிலக்க ஊடகங்களை நாடியபோது அச்சிதழின் தேவை வெகுவாகக் குறைந்தது.

எழுச்சியிலும் தொய்விலும் தமிழ் முரசு தன் பணியைத் தொடர்ந்தது, தொடர்கிறது. அதுவே சமூகத்தின் மீதான முரசின் கடப்பாடு; இந்நாட்டின் தேசிய தமிழ் நாளிதழுக்கு மக்கள் ஆற்றும் கடமை. இந்தக் கடப்பாடும் கடமையும் காலங்கள் தாண்டி நீடித்திருக்கும்.

மக்களுக்கான முரசு மக்களால் மென்மேலும் வளரும், பல நூற்றாண்டுகள் கடந்தும் வாழும்!

படங்கள், பத்திரிகைகள் அனுப்பி வையுங்கள்

தமிழ் முரசின் 90வது பிறந்தநாளை சமூகத்துடன் இணைந்து பெருமையுடன் கொண்டாடுவோம். 

சிறப்பிதழ், நிகழ்வுகள் என பலவற்றையும் தமிழ் முரசு திட்டமிடுகிறது. உங்கள் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடுகிறோம்.

தமிழ் முரசு குறித்த நினைவுகள், படங்கள், குறிப்புகள் உங்களிடமோ உங்கள் குடும்பத்தாரிடமோ இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

முரசு, தமிழவேள் கோ.சாரங்கபாணி, தமிழர் திருநாள் என தமிழ்முரசு தொடர்பான பழைய புகைப்படங்கள், பழைய தமிழ் முரசு பிரதிகள் இருந்தால் தந்து உதவுங்கள். தமிழ் முரசுடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவற்றை tamilmurasu@sph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்