தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைசிறந்த தாதியரைக் கௌரவித்த விருது விழா

2 mins read
c6463a9e-488f-4e3a-a250-a339b6565699
தாதியர் தகுதி விருது பெற்ற திருவாட்டி லீலாவதி சுப்புராயன். - படம்: செங்காங் பொது மருத்துவமனை

தலைசிறந்த தாதிமைத் திறன், நோயாளிகளின் நலனில் மிகுந்த அர்ப்பணிப்பு. இவையே இந்த ஆண்டிற்கான தாதியர் தகுதி விருதை வென்றிருக்கும் 57 வயது திருவாட்டி லீலாவதி சுப்புராயனின் அடையாளம். 

வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெற்ற 2024 தாதியர் தகுதி விருது விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்ட திருவாட்டி லீலாவதி, தற்போது கிடைத்திருக்கும் விருது மிகவும் அர்த்தமுள்ளது எனக் குறிப்பிட்டார்.

“தாதிமைத் துறையில் 35 ஆண்டு அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கையில் வியப்பாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் தாதிமைத் துறையில் குறிப்பிடத்தகுந்த பல மாற்றங்களைச் சந்தித்துள்ளேன்.

“அவ்வகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப செயலாற்றவும் நோயாளிகளுக்கு இன்னும் மேம்பட்ட பராமரிப்பை வழங்கவும் இவ்விருது ஊக்கமளிக்கிறது,” என்று திருவாட்டி லீலாவதி தமிழ் முரசிடம் கூறினார்

செங்காங் பொது மருத்துவமனையில் அகநோக்கியல் (எண்டோஸ்கோபி) துறையில் முதன்மை தாதியாக பணியாற்றும் இவர், “தாம் சந்திக்கும் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவு நல்க கிடைக்கும் வாய்ப்பும், நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புவதைக் காண்பதும், அவர்கள் வாழ்வில் ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்துவதும் இப்பணியில் தொடர்ந்து நீடிக்க உத்வேகம் அளிக்கிறது,” என்று கூறினார். 

விழாவில் 150 தாதியருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தார் அமைச்சர் ஓங். 1976ல் தொடங்கப்பட்ட தாதியர் தகுதி விருது, தாதிமைப் பணியில் கவனிக்கத்தகுந்த, தலைசிறந்த வகையில் பணியாற்றுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விழாவில் விருது வென்றவர்களுள் 47 வயது திருவாட்டி வரதன் அறிவழகியும் (அறிவா) ஒருவர். புக்கிட் பாத்தோக்கில் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தில் மூத்த தாதிமை மேலாளராகப் பணிபுரியும் திருவாட்டி அறிவா, தகுதிவாய்ந்த தாதிமை பராமரிப்பை ஆதரிப்பவர். 

முதுமைக்கால நினைவாற்றல் இழப்பு (டிமென்ஷியா) பிரிவு சார்ந்த பராமரிப்பு இவரது நிபுணத்துவம். பணி வாயிலாக சமூகத்தைச் சென்றடைவதில் ஆர்வம் கொண்ட கடப்பாடுமிக்கவர் திருவாட்டி அறிவா. பராமரிப்புப் பணியையும் கடந்து, கற்றல், கற்பித்தல் என தொழில்சார்ந்த நிபுணத்துவத்தில் தலைசிறந்து விளங்குவதும் இவருக்கு விருது வழங்கப்பட்டதற்கான காரணங்கள்.

இதற்கிடையே, விழாவில் உரையாற்றிய அமைச்சர் ஓங், “தாதிமைத் துறைக்கு வருவதை யாரும் விரும்பமாட்டார்கள் என்று சொல்லப்படுவதை ஒருபோதும் நம்ப வேண்டாம்,” என்று  குறிப்பிட்டார். 

மாணவர்களில் 25 பேரில் ஒருவர் தாதிமைக் கல்வி பயில்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தாதிமைப் பள்ளிக்குச் செல்ல விரும்பியும் அது நிறைவேறாததால் பல சிங்கப்பூரர்கள் அக்கல்வி கற்க விருப்பம் தெரிவிப்பதுண்டு என்றும் சொன்னார்

தாதிமைக் கல்வி பயில விழையும் தங்கள் ஆர்வத்தை குறிப்பிட்டு, தமக்கும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் வேண்டுகோள் விடுப்பதுண்டு எனவும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

2024ல் கல்வி மற்றும் தாதியர்க்கான பயிற்சிகளை மேம்படுத்தும் இலக்கோடு உயர்கல்வி நிறுவனங்கள் புதிய பாடங்களை வரைய உள்ளதாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் தாதியர்க்கான திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கூறிய நிறுவனங்களுடன் செயலாற்றி வருவதாகவும் அமைச்சர் ஓங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்