வசதிகுறைந்தோர் வாழ்வில் வளம் சேர்க்க விரும்பும் பொதுச் சேவை ஆணையக் கல்விமான்

3 mins read
12b57333-a01c-440e-8069-8033a10eaa1b
அமைச்சர் சான் சுன் சிங்கிடமிருந்து உபகாரச் சம்பளம் பெற்றுக்கொள்ளும் விக்னேஷ் நாராயணன். - படம்: த. கவி
multi-img1 of 2

அமைச்சு வழங்கும் மானியங்களைக் கொண்டு குறைந்த வருமானக் குடும்பங்களில் ஆக்ககர மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெற்ற நேரடி அனுபவம், பொருளியல் துறையை தேர்வு செய்ய 19 வயது விக்னேஷ் நாராயணனைத் தூண்டியது.

பொதுச் சேவை ஆணையத்தில் உபகாரச் சம்பளத்தின் பொருளியல் துறையில் பட்டக்கல்வியை மேற்கொள்ள இருக்கும் விக்னேஷ் இந்த ஆண்டின் பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற 54 பேரில் ஒருவர். கல்வி அமைச்சரும் பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான் சுன் சிங்கிடமிருந்து புதன்கிழமை (ஜூலை 17) உபகாரச் சம்பளம் பெற்ற விக்னேஷ், லண்டன் பொருளியல் பள்ளியில் மேற்படிப்பை படிக்க உள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, தொண்டூழியம் செய்ய கிடைத்த வாய்ப்பு விக்னேஷ் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து சமுதாயம், குடும்ப மேம்பாட்டு அமைச்சில் வேலைப் பயிற்சி மேற்கொண்டபோது, பொருளியல் சார்ந்து அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

அந்த ஆய்வுகளை அறிக்கைகளாக மாற்றி பொருளியல் சார்ந்த உதவிகளை வசதியற்றோருக்கு அமைச்சு எவ்வாறு அளிக்கிறது என்பதை அவர் கண்டறிந்தார். அந்த அனுபவம் பொருளியல் வளர்ச்சியை ஒவ்வொருவருக்கும் வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்ற பேரார்வத்தை விக்னேஷுக்கு ஏற்படுத்தியது.

“மானியங்களைக் கொண்டு மக்களின் வாழ்வை மேம்படு்த்த என்னால் இயலும் என்று அங்கு உடன் செயலாற்றியவர்கள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தனர். அதுவே இன்று என்னை பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற வழிவகுத்துள்ளது,” என்று தனது வெற்றிப் பயணத்தை விவரித்தார் விக்னேஷ். இவர், ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியில் பயின்றவர்.

“இந்த உபகாரச் சம்பளம் பல்கலைக்கழகத்தில் கற்பதற்காக கிடைக்கும் உதவித்தொகை மட்டுமன்று. படிப்பு முடிந்தவுடன் கிடைக்கும் வேலை சார்ந்தது மாத்திரமல்ல. இந்த உபகாரச் சம்பளம் பொறுப்புடனும் சேவையாற்றும் அழைப்புடனும் வரும் விருதாகும்,” என்று விழாவில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

“எளிமையாக சொல்லப்போனால்  சிங்கப்பூரை நூற்றாண்டு காணும் தேசமாக வழிநடத்தப்போவது இளையர் தலைமுறையே,” என்று மாணவர்களிடம் கூறினார் அமைச்சர்.

“இளம் தலைமுறையினருக்கும் சவால்கள் இருக்கும். கடந்த 50 ஆண்டு காலத்தில் தண்ணீர் ஒரு சவாலாக இருந்தது என்றால், வரும் 50 ஆண்டுகளில் தூய்மையான எரிசக்தி சிங்கப்பூருக்கு சவாலாக இருக்கலாம். சிங்கப்பூரிடம் தூய்மையான எரிசக்தி இருந்தால், போதிய உணவு, தண்ணீர், தொழில்துறை உள்ளிட்ட மக்களுக்கான பலவற்றையும் சிங்கப்பூரால் பெற்றுக்கொள்ள முடியும். சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல இளையர்களால் முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாண்டு பொதுச் சேவை உபகாரச் சம்பளம் பெற்ற 54 பேரில் 28 விழுக்காட்டினர் உள்ளூர் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களில் பயில்வர். அவர்களில் 57 விழுக்காட்டினர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் பட்டப்படிப்பு பயில செல்லவிருக்கின்றனர் எனத் தெரிவித்தார் பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் லீ ஸு யாங்.

உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டோர், எந்த நோக்கத்திற்காக இந்தப் பாதையை தேர்வு செய்துள்ளோம் என்பதை நினைவில்கொள்வது அவசியம் என்ற திரு லீ, நாடு எதிர்கொள்ளும் சவால்களையும் வாய்ப்புகளையும் கல்விமான்கள் எவ்வாறு வரையறுத்து உதவுகின்றனர் என்பதை சிங்கப்பூரர்கள் எதிர்பார்த்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்