சிலேத்தார் வட்டாரத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.
ஏறத்தாழ 50 தீயணைப்பாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதிகாலை 2.35 மணி அளவில் 21 சிலேத்தார் வெஸ்ட் ஃபார்ம்வே 1ல் தீ மூண்டதாகத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அங்குள்ள ஒற்றை மாடி கிடங்கு தீப்பற்றி எரிந்தது.
30 மீட்டர் நீளம் 20 மீட்டர் அகலம் பரப்பளவு கொண்ட கிடங்கில் அலுவலகம் ஒன்றும் தளவாடப் பொருள்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மூன்று தீயணைப்புச் சாதனங்களையும் ஆளில்லாத் தீயணைப்பு இயந்திரம் ஒன்றையும் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குப் பத்து அவசரநிலை வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தீயணைக்கப்பட்டுவிட்டபோதிலும் அவ்விடத்தில் மீண்டும் தீப்பிடிக்காமல் இருக்க தீ மூண்ட இடத்தில் நீர் தெளிப்புப் பணிகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம் கண்ணுக்குப் புலப்படாத தீக்கதிர்கள் அணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கிடங்கில் தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.