தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருங்காலத் தலைவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் உபகாரச் சம்பளம்

2 mins read
3a43722c-75ef-4cbe-aed4-ab7e3cad42b3
‘லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்’ பெற்ற மாணவர்களில் சிலர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம் பெறுவோர், அவ்வாய்ப்பினைத் தங்கள் சொந்த ஆர்வங்களில் முன்னேறிச் செல்வதற்கு மட்டுமின்றி, சமூக மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும் என ‘எஸ்பிஎச்’ அறநிறுவனத் (எஸ்பிஎச்எஃப்) தலைவர் ரோலண்ட் இங் கேட்டுக்கொண்டுள்ளார். 

வியாழக்கிமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பள விருது விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு இங், இளையர்களின் திறன்களும் முயற்சிகளும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனக் குறிப்பிட்டார். 

காலஞ்சென்ற திரு லிம் கிம் சான் சிங்கப்பூர் வளர்ச்சிக்கு ஆற்றிய முக்கியப் பணிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“அமைச்சராக இருந்த, தேசத்தின் இலட்சியத்  தலைவர்களில் ஒருவரான திரு லிம் கிம் சான், நாடு குறித்த வியத்தகு தொலைநோக்குப் பார்வை கொண்டவர்; அர்ப்பணிப்பும் பரிவும் மிக்க மனிதர். இந்த உபகாரச் சம்பளம் அவரை நினைவுகூர்ந்து, போற்றுவதற்கு மட்டுமல்லாமல், நம் எதிர்காலத் தலைவர்களில் முதலீடு செய்வதன் வாயிலாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை நீடித்திருக்கச் செய்யவும் நிறுவப்பட்டது,” என்று திரு எங் குறிப்பிட்டார்.

சவால்கள் நிறைந்த குடும்பச் சூழலுக்கு இடையிலும், மாணவர்கள் கல்விசார்ந்த தங்கள் இலக்குகளை அடைவதற்கு உதவும் வகையில், எஸ்பிஎச் அறநிறுவனத்தால் 2006ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

18வது முறையாக இடம்பெற்ற இந்த வருடாந்தர விருது வழங்கும் விழாவில் உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டவர்களில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விநிலையங்களில் பயிலும் மாணவர்களும் அடங்குவர். இவ்வாண்டு 12 பேருக்கு ‘லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்’ வழங்கப்பட்டது. 

இதுவரை 180க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில்கொண்டு, அதனை மாணவர்கள் சமாளிக்கும் வகையில் பட்டப்படிப்புக்கான முழு பாடக்கட்டணத்துடன், வாழ்க்கைச் செலவினம் மற்றும் புத்தக உதவித்தொகையை இந்த ஆண்டு $2,300 வெள்ளியிலிருந்து $3,000 வெள்ளியாக ‘எஸ்பிஎச்எஃப்’ உயர்த்தியுள்ளது.

இதற்கிடையே, 2023ஆம் ஆண்டு லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம் பெற்றவர்களில் ஒருவரான திரு ஹரிதாஸ், 24, இந்த உபகாரச் சம்பளம் தனது கல்விப்பயணத்தைச் சிறப்பாக வடிவமைக்கப் பெரிதும் கைகொடுத்ததாகத் தமிழ் முரசிடம் குறிப்பிட்டார்.

“இந்த உபகாரச் சம்பளத்தின் வாயிலாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஸ்கூல்ஸ்’இல் வேலைப் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலமாக செய்தித்துறை சார்ந்த சிறந்த அனுபவங்களைப் பெறமுடிந்தது. தற்போது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் வேலைப் பயிற்சி பெற்று வருகிறேன்.  

“எதிர்காலத்தில் செய்தித் துறையை வாழ்க்கைத் தொழிலாகத் தெரிவுசெய்ய ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக நிதி சார்ந்த குற்றவியல் பற்றிய செய்திகளை எழுத நான் விரும்புகிறேன்,” என்று திரு ஹரிதாஸ் சொன்னார். 

மேலும், பிற்காலத்தில் தேவையுள்ளோருக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, அதன்வழி சமூகத்திற்கு நன்மைதரும் பங்களிப்புகளை வழங்கவும் தாம் உறுதிகொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

குறிப்புச் சொற்கள்