கடந்த பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சிங்கப்பூரில் காகங்களின் எண்ணிக்கை 20 மடங்குக்கும் மேல் அதிகரித்துவிட்டதால், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைச் சுடுவதற்கு தேசிய பூங்காக் கழகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2016ல் கிட்டத்தட்ட 7,295ஆக இருந்த காகங்களின் எண்ணிக்கை, 2024ல் 160,000ஆக உயர்ந்துள்ளது என்று கழகத்தின் வனவிலங்கு மேலாண்மைப் பிரிவின் குழு இயக்குநர் திரு ஹாவ் சூன் பெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
“காகங்கள் ஒப்பீட்டளவில் தீவு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன,” என்றார் அவர்.
குடியிருப்புகளில் குண்டுகள் பாய்ந்த சம்பவங்களால் 2020ல் நிறுத்தப்பட்ட துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை, மாற்று முறைகள் பலனளிக்காததாலும் காகங்களின் தாக்குதல் அதிகரிப்பதாலும் மீண்டும் இம்மாதம் நடப்புக்கு வருகிறது.
உணவுக் கழிவுகள் தாராளமாகக் கிடைப்பதே அதன் அதிக எண்ணிக்கைக்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.
கூடு நீக்கம், மரங்களை வெட்டுதல், பொறி வைத்தல் போன்ற தற்போதைய முறைகளுடன் சுடுவதும் இடம்பெறும்.
பறவைகளுக்குச் சட்டவிரோதமாக உணவளிப்பவர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கழகம் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் இயற்கை நலச் சங்கமும் (NSS), தனது 2023, 2025 கணக்கெடுப்புகளின்படி காகங்களின் எண்ணிக்கை பெருகி வருவதாகக் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
காகங்கள் ஆக்கிரமிப்பு இனத்தைச் சேர்ந்தவை என்பதால், அவை உள்நாட்டுப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, மனிதர்களையும் தாக்குகின்றன என்று சங்கத்தின் பராமரிப்புப் பிரிவின் துணை இயக்குநர் அல்பர்ட் லியூ கூறினார்.
எனினும், கொல்லும் நடவடிக்கை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான குறுகியகால இறுதி முயற்சியாக இருக்கவேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நகர பறவைகள் பாதுகாப்புக் குழு (Urban Birds Initiative) போன்ற அமைப்புகள், பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் இத்தகைய கடும் நடவடிக்கை எடுப்பது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன.

