சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான சுல்தான் பள்ளிவாசல் இவ்வாண்டு அதன் 200வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.
1824ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல், கம்போங் கிளாமின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அது இருநூறாண்டுகளாக சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சமய, கலாசார அடையாளமாக இருந்து வருகிறது.
இந்த வரலாற்று மைல்கல்லை நினைவுகூரும் வகையில், ‘சிங்கப்பூரின் பிரம்மாண்டமான பள்ளிவாசல் – சுல்தான் பள்ளிவாசலின் வரலாற்றில் இருநூறு ஆண்டுகள்’ (The Grand Mosque of Singapore – Two Centuries in the History of Masjid Sultan) எனும் நினைவு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் உள்ளரங்கில் திங்கட்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வான் ரிசால், டாக்டர் சையது ஹாருன் அல்ஹப்ஷி, பல்வேறு சமூக, சமயத் தலைவர்கள் முதலியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஃபைஷால், வரும் ஆண்டுகளில் மலாய் மரபுடைமை நிலையத்திலும் சுல்தான் பள்ளிவாசலிலும் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் மூலம் கம்போங் கிளாம் புத்துயிர் பெரும் எனக் கூறினார்.
இந்த மேம்பாடுகள், எதிர்கால தலைமுறைகளுக்கு இவ்விடத்தை துடிப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வைத்திருக்கும் அதே வேளையில், கம்போங் கிளாமை ஒரு பாரம்பரிய வளாகமாகவும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
“சுல்தான் பள்ளிவாசல், கம்போங் கிளாம் பகுதியில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது. இது ஒரு வழிபாட்டுத் தலம் என்பதைக் தாண்டி சிங்கப்பூரர்கள், சுற்றுலாப் பயணிகள், முஸ்லிம் சமூகத்தினர் முதலியோருக்கான ஒரு முக்கியக் கலாசார அடையாளமாகவும் திகழ்கிறது,” எனவும் டாக்டர் ஃபைஷால் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிதாக வெளியிடப்பட்ட நினைவு நூல், பள்ளிவாசலின் 200 ஆண்டுகால வரலாற்றை மட்டுமல்லாது, சமூகத்தின் பகிர்ந்த நினைவுகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
சுல்தான் பள்ளிவாசலில் இடம்பெற்ற வழிகாட்டப்பட்ட சுற்றுலாவையடுத்து, அதிபர் தர்மன் நினைவு நூலை அதிகாரபூர்வமாக மேடையில் வெளியிட்டார்.
பள்ளிவாசலின் சமூகப் பங்களிப்புகளை மேலும் வலியுறுத்தும் வகையில், புதிய சின்னமும் முழக்கவரியும் நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டன.
“எங்கள் சமுதாயக் கூட்டத்தினர், பங்குதாரர்கள், அனைத்து வருகையாளர்களுக்கும் சேவை செய்யும் எங்கள் நீடித்த அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது,” எனப் பள்ளிவாசலின் மேலாண்மைக் குழுத் தலைவர் அப்துல் சலீம் அகமது இப்ராஹிம் கூறினார்.
மேலும், நாட்டுத் தலைவர்கள்முதல் பொதுமக்கள்வரை, அனைவரையும் வரவேற்கும் ஒரு மக்கள் மையமான பள்ளிவாசலாக சுல்தான் பள்ளிவாசலை நிலைப்படுத்தும் நோக்கத்தையும் இம்மாற்றம் முன்வைக்கிறது என்று அவர் கூறினார்.
பள்ளிவாசலின் ஆரம்ப வளர்ச்சியைப் பற்றிய புதிய நுண்ணறிவுகள், காலனித்துவக் கால ஆவணங்கள், திருத்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் போன்றவை நினைவு நூலில் இடம்பெறுகின்றன.
இந்த நூலில் இடம்பெறும் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, சுல்தான் பள்ளிவாசல் 1824ல் அல்ல, 1819ஆம் ஆண்டிலேயே ஓர் மரக் கட்டமைப்பாக தோன்றியிருக்கலாம் என்பதாகும். அந்த ஆண்டில் சுல்தான் ஹுசைன் ஷா இந்த முதற்கட்ட அமைப்பை நிறுவியிருக்கலாம் என ஆராய்ச்சி கூறுகிறது.
மேலும், 1879ஆம் ஆண்டு பள்ளிவாசல் சமூகப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட கட்டடக்கலை, சமயப்பணி மாற்றங்கள் போன்ற முக்கியத் தகவல்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவு நூலில், பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், பள்ளிவாசலின் சமயத் தலைவர்கள் முதலியோரின் பங்களிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆதரவுடன் வெளியிடப்பட்ட இந்த நூல், சிங்கப்பூரின் பழமையான சமயத் தலங்களில் ஒன்றின் வரலாற்றைப் பதிவு செய்து பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.