சுமோ சேலட் (Sumo Salad) உணவுக் கடை ஊழியர் ஒருவர் வேலையிடத்தில் காயமடைந்ததாகப் பொய்த் தகவல் அளித்து காப்புறுதி இழப்பீடு கேட்டதாக சந்தேகிக்கப்படுவது குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்திவருகிறது.
மறைந்த சுமோ சேலட் உரிமையாளரான ஜேன் லீ, இந்த விவகாரத்தை வெளிப்படுத்திய பிறகு உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
‘டிரைப்பார்ட்டைட் கனெக்ட்’ எனப்படும் முத்தரப்புக் குழு நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய திரு தினேஷ், திருவாட்டி லீ இறப்பதற்கு முன்பிருந்தே மனிதவள அமைச்சு அவருடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்தார்.
சுமோ சேலட் ஊழியர் கேட்ட காப்புறுதி இழப்பீடு குறித்து சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்துடன் அமைச்சு இணைந்து செயல்படும் என்றும் திரு தினேஷ் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணை முடிந்தவுடன் மேல்விவரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊழியர் தவறாக நடந்துகொண்டதாக இம்மாதம் 18ஆம் தேதி ஃபேஸ்புக்கில் இரு பதிவுகளை வெளியிட்ட திருவாட்டி லீ, அதற்கு மறுநாள் உயிரிழந்தார்.
தமது முன்னாள் ஊழியர் ஒருவர், சுமோ சேலட்டிடமிருந்து காயமடைந்தோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டைப் பெற தனது வேலை ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தாம் கீழே விழுந்ததாகப் பொய்த் தகவல் அளித்ததாக திருவாட்டி லீ சொன்னார்.
அது, அந்த ஊழியரின் கணவர், ஒரு சட்ட நிறுவனம் ஆகிய தரப்புகள் சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட செயல் என்று திருவாட்டி லீ கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
காப்புறுதி இழப்பீடு பெற ஊழியர் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைதானா என்று முழுமையாக விசாரணை நடத்துமாறு திருவாட்டி லீ, மனிதவள அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம், பொதுமக்களிடையே மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலும், வேலையிடத்தில் ஊழியர்கள் காயமடைந்ததாகக் கூறப்படும் விவகாரங்களைக் கையாளும்போது தாங்கள் எதிர்நோக்கும் கடும் நெருக்குதலைப் பற்றிச் சில சிறிய, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் பேசினர்.
ஊழியர்கள் உண்மையாகவே காயமடைவது, அவ்வாறு நிகழ்ந்ததாகப் பொய்த் தகவல் வெளியிட்டது ஆகிய இருவகை விவகாரங்களுக்கும் இது பொருந்தும்.

