தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடர்

2 mins read
356a828d-b2f7-4f9f-842b-4b52ee8d3c8c
தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடரின் முதல் நிகழ்ச்சியில் தலைமைச் சிற்பியான முனைவர் க. தக்‌ஷிணாமூர்த்தி ஸ்தபதி தமது பணிகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். - படம்: தமிழ் முரசு
multi-img1 of 2

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ எனும் புதிய வலையொளித் தொடரில், எத்திக்கும் புகழ் மணக்கும் வித்தகக் கலைஞர்கள் பலருடனான நேர்காணல்கள் இடம்பெறவிருக்கின்றன.

அரிய கலை வடிவங்கள், அதிகமானோர் ஈடுபடாத கலைகள், பலரும் அறிந்த கலை வடிவங்களில் அரிதான சாதனை படைத்தவர்கள் எனப் பல்வேறு கலைஞர்கள் தங்கள் துறை குறித்தும் பணிகள் குறித்தும் பகிர்ந்துகொள்கின்றனர்

இந்த வலையொளித் தொடரின் முதல் நிகழ்ச்சியில் தமது பணிகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார் தலைமைச் சிற்பியான முனைவர் க. தக்‌ஷிணாமூர்த்தி ஸ்தபதி.

‘ஸ்தபதி’ என்றும் ‘பெருந்தச்சர்’ என்றும் சொல்லப்படும் தலைமைச் சிற்பி, புதிய கோயில்களை நிறுவுதல், ஏற்கெனவே உள்ள கோயில்களின் பராமரிப்பு, மறுசீரமைப்பு, குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர்.

அந்த வகையில், இந்தியாவிலும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும் இத்தகைய திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் முனைவர் க. தக்‌ஷிணாமூர்த்தி ஸ்தபதி.

சிங்கப்பூரில் சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயிலுக்கு 2023ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பாக, அக்கோயிலின் மரபுடைமைப் பாதுகாப்பில் முக்கியப் பங்களித்தவர் இவர். அந்தப் பணிக்காக, நகர மறுசீரமைப்பு ஆணையம் இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இவருடைய தந்தை ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி, கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபப் பணிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றில் தலைமை ஸ்தபதியாக இருந்தவர். கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய தலைமைச் சிற்பி கணபதி, இவரது தாய் மாமன்.

தமிழ் முரசுக்கான நேர்காணலில், “சிற்பக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ச்சியடைய ஒரு பிறவி போதாது,” என்று கூறினார் தக்‌ஷிணாமூர்த்தி ஸ்தபதி.

மேலும், சிற்பக் கலையில் வடக்கு, தெற்கு என்றெல்லாம் வேறுபாடு இல்லை என்றும் எப்படிச் சூரியன் அனைவர்க்கும் பொதுவானதோ அதேபோல்தான் சிற்பக் கலையும் என்றும் குறிப்பிட்டார்.

சிற்பங்களுள் பல்லவர் காலச் சிற்பங்களைக் கவிதை என்று வர்ணிக்கும் இவர், அவற்றில் உயிரோட்டம் இருக்கும் என்று விளக்கினார்.

தாம் பெரிதும் வியக்கும் பல்லவ மன்னன் ராஜசிம்மனைப் பற்றிய அரிய தகவல் ஒன்றைத் தாம் கண்டுபிடிக்க நேர்ந்த தருணம் குறித்தும் அதை ஆதாரபூர்வமாக நூல் வடிவில் ஆவணப்படுத்தியுள்ளது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

காலத்தை விஞ்சி நிற்கும் சிற்பங்களைப் பராமரிக்கும் விதங்கள் குறித்தும் கருத்துரைத்தார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்