செய்தித்துறையில் பணியாற்றியபோது ஏற்பட்ட அறிமுகம், இணையர்களான திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், 68 - முனைவர் சித்ரா ராஜாராம், 61, வாழ்க்கைத் தொழிலிலும் நீடித்துப் பிறகு இன்றளவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்திலும் தொடர்கிறது.
தொண்ணூறாவது ஆண்டில் கால்தடம் பதித்து நூற்றாண்டை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள தமிழ் முரசின் பாதையில் இவ்விணையர் பதித்துள்ள முத்திரை தனித்துவமானது.
இந்நாளிதழின் வரலாற்றில், தமிழ் முரசின் ஆசிரியர்களாகத் பொறுப்பு வகித்த ஒரே இணையர் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைத் துறை வரலாற்றிலேயே ஒரே நாளிதழின் ஆசிரியர்களாக இணையர் இருவரும் பொறுப்பேற்று வழிநடத்தியதும் இதுவே முதல்முறை என்றாலும் அது மிகையாகது.
“கனவுபோலத் தோன்றுகிறது, இதை எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அது சாத்தியமாயிற்று. இதயத்தால் நாங்கள் இருவருமே செய்தியாளர்கள்.
‘‘நாங்கள் சந்தித்தபோது நான் ‘த நியூ பேப்பர்’ இதழிலும், ராஜேந்திரன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிலும் பணியாற்றினோம்,” என்று நினைவுகூர்ந்தார் முனைவர் சித்ரா.
1999ம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பதவி வகித்தார் இவர்.
மின்னிலக்கத்தை நோக்கிய திசையில் தமிழ் முரசு அடியெடுத்து வைத்தபோது தொடங்கியது இவரின் பணி.
தொடர்புடைய செய்திகள்
“அனைவருக்கும் படிக்க ஏதாவது ஒன்று நாளிதழில் இருக்க வேண்டும், சமூகத்துடன் பேரளவில் இணைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாளிதழ் மறுசீரமைப்பு பெற்றது,” என்று முனைவர் சித்ரா குறிப்பிட்டார்.
சமூகத்துடனுனான பிணைப்பை வலுப்படுத்தும் இலக்குடன் தொடங்கப்பட்ட தமிழ் ஆசிரியர்களுக்கான ’நல்லாசிரியர் விருது’, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கோசா கல்வி அறநிதி’ உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் இவரது பதவிக்காலத்தில் அரங்கேறின.
பெண் தலைமைத்துவம்
ஆசிரியராக இருந்தபோது சந்தித்த பெரிய சவால் என்னவென்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் ஆசிரியர் சித்ரா, ‘‘பெண்ணாகச் செய்தியரங்கை வழிநடத்துவதுதான்,’’ என்றார்.
தாம் பதவியேற்ற காலகட்டத்தில் இத்துறையில் பெண் ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர் அல்லது இருக்கவில்லை என்பதை சுட்டிய இவர், ‘‘பரவலாக ஆண்களின் தலைமைத்துவத்தில் துறை இயங்கி வந்த அக்காலத்தில், பெண் தலைவர்கள் வெற்றி பெறுவது எளிதாக இல்லை,’’ என்றார்.
சமகாலத்தில் வலம்வரும் நவீன இந்தியப் பெண்ணாகத் தற்போது அவற்றைச் சிந்தித்துப் பார்க்கையில் அவ்விஷயங்கள் இப்போது வேறுபட்டுள்ளன என்றார் முனைவர் சித்ரா.
தமிழ் முரசு அதன் 90 ஆண்டு பயணத்தில் இரு பெண் ஆசிரியர்களைக் கண்டுள்ளது, என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே, 2006ஆம் ஆண்டில் தமிழ் முரசின் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்ற திரு ராஜ், குறிப்பிடத்தகுந்த இப்பயணத்தில் சமூகத்துடன் இணைந்து செல்ல தம்மை ஆயத்தப்படுத்தியதே தம் மனைவிதான் என்றார்.
ஆங்கிலச் செய்தியாளராகவே தொடர்ந்து செயலாற்றிவந்த தமக்கு தமிழ் முரசுக்குள் இணை ஆசிரியராக நுழைவதற்கான வாய்ப்பு வந்தபோது தமக்கிருந்த தயக்கத்தை அகற்றி, புதிய தொடக்கத்திற்கு வித்திட்ட பெருமையும் தம் மனைவியையே சாரும் என்றும் திரு ராஜ் சொன்னார்.
வழியாகவும் விழியாகவும் இருந்த துணைவியார்
‘‘தமிழரான நீங்களே சமூகத்திற்காக ஏதேனும் செய்யவில்லை என்றால், வேறு யார் அதனைச் செய்யக்கூடும்?’’ என்று தம் மனைவி எழுப்பிய ஒற்றைக் கேள்வி, தமிழ் நாளிதழில் திறம்பட பணியாற்ற முடியுமா என்ற அச்சத்தை அகற்றி, தாம் தமிழ் முரசில் இணையவும் பிறகு ஆசிரியராகவும் பணியைத் தொடர்ந்திடவும் மிகப்பெரிய ஊக்கமாகத் திகழ்ந்தது என்றும் திரு ராஜ் கூறினார்.
‘‘சமூகத்தின் தேவை, செய்தியாளராக நாம் செய்ய வேண்டிய பணிகள் எனப் பலவற்றை சித்ரா விவரித்தபோது, சமூகத்திற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன்,’’ என்றார் அவர்.
தம் மனைவி தமிழ் முரசு முன்னாள் ஆசிரியராக இருந்ததால் அது தமக்கு எவ்வாறு நன்மை விளைவித்தது என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.
‘‘துறையில் அவருக்கு இருந்த முன் அனுபவம், ஆர்வம், இருமொழிப் புலமை ஆகியவை நான் இப்பணியில் சேர்ந்தபோது, எனக்கு அவர் வழியாகவும் விழியாகவும் உறுதுணையாக இருக்க செய்தது,’’ என்று குறிப்பிட்டார் திரு ராஜ்.
ஓயாது உழைப்பது அவசியம்
தமிழ் முரசு தனது 90வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் தருணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு ராஜ், ஆயினும், இதுவரை சாதித்தவற்றை மட்டும் நினைத்து அதிலே திளைத்து ஒய்வவெடுத்துவிட முடியாது என்றார்.
‘‘வருங்காலம் மின்னிலக்கமயமானது. அதற்கேற்ப ஆயத்தமாவது அவசியம். ‘தமிழ் முரசு 90’ கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாளிலிருந்து இன்னும் வலுவான பணி தொடங்குகிறது.
‘‘அது நூற்றாண்டை நோக்கித் தமிழ் முரசை வழிநடத்த, சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து நிலைத்திருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணி,’’ என்று அவர் வலியுறுத்தினார்.
காலத்தின் கட்டாயம்
முரசவையை அலங்கரிக்கவிருக்கும் அடுத்த தலைமுறைப் பணியாளர்களுக்கு ஏதேனும் கூற விழைகிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த முனைவர் சித்ரா, ‘‘ஒவ்வொருவரும் அவரவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசுங்கள், சமூகத்திற்கான குரலை உரக்கப் பதிவிடுங்கள்,’’ என்று கூறி வாழ்த்தினார்.
மக்களின் குரலாக, சமூகத்தின் மூச்சாக அயராது இயங்கிவரும் தமிழ் முரசின் குரலைப் பேணி பாதுகாத்தல் அவசியம் என்ற திரு ராஜ், ‘‘குரலில்லை என்றால் அங்கு நிலவும் அமைதி சமூகத்தின் அக்கறைகளைக் கேட்கச் செய்யாது,’’ எனவும் எச்சரித்தார்.
எனவே, எதிர்கால சவால்களைக் கருத்தில்கொண்டு மின்னிலக்கத்துடன் பொலிவு பெற்று, சிறந்த தலைமைத்துவத்துடன் தமிழ் முரசு தழைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார் செய்தித்துறையில் 44 ஆண்டுகள் பணியாற்றி இருதினங்களுக்கு முன்னர் ஓய்வுப் பெற்ற திரு ராஜ்.