சிங்கப்பூரின் அரசுச் சார்பு முதலீட்டு நிறுவனமான தெமாசெக், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளைக் கணிசமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
தற்போது நிறுவனத்தின் முதலீடுகளில் ஆறு விழுக்காடாக இருக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் பங்களிப்பை, 2031ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31க்குள் 15 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வணிக மாதிரிகளையும் வேலைகளின் தன்மையையும் மறுவடிவமைப்பு செய்து வருவதாக தெமாசெக் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாக அதிகாரி தில்ஹன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில், ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற முன்னணி நிறுவனங்களிலும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திலும் தெமாசெக் முதலீடு செய்துள்ளது.
பகுதி மின்கடத்திகள், தரவு மையங்கள், மேகக் கணிமச் சேவைகள் என செயற்கை நுண்ணறிவு மதிப்புச் சங்கிலியின் ஐந்து முக்கியப் பிரிவுகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
சந்தை மாற்றங்கள், நிறுவனங்களின் அதிகப்படியான மதிப்பீடுகள் போன்ற ஆபத்துகள் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு என்பது இணையத்தைப் போல பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஒரு நீண்டகால முதலீட்டுத் தளம் என்று தெமாசெக் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சியா சோங் ஹுவீ குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், குறித்த அபாயங்களை தெமாசெக் புரிந்துவைத்திருக்க வேண்டும் என்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிவகைகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தெமாசெக்கின் மின்னிலக்கப் பயணத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகள் ஓர் இயல்பான நீட்டிப்பு என்று திரு சியா தெரிவித்தார்.
தெமாசெக்கின் முதலீடுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகளுக்கு 15 விழுக்காடு இலக்கு வகுப்பது நிர்வகிக்கக்கூடிய அளவுதான் என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.

