தைப்பூசத் தொண்டூழியம்: அறியப்படாத நாயகர்கள்

தைப்பூசத் தொண்டூழியம்: அறியப்படாத நாயகர்கள்

3 mins read
84a92dfd-5569-4189-833f-c850d1bc7bee
தன் நிறுவனத்தைச் சார்ந்த சக தொண்டூழியர்களுடன் அடைக்கலம் தினேஷ் (வலம்). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 4

வண்ணமயமான காவடிகள், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் பால்குடங்கள், வெள்ளி ரத ஊர்வலம் போன்றவையே தைப்பூசத்தின் அடையாளங்களாக மக்கள் பலராலும் உணரப்படுகின்றன.

ஆனால், அவற்றுக்கும் அப்பால் பக்தி பன்முகம் கொண்டது என்பதை நிரூபித்துவருகின்றனர் தொண்டூழியர்கள்.

பால்குடத்தைத் தயாரிப்பது, ரதம் இழுப்பது, காய்கறிகள் வெட்டுவது, உணவு சமைக்க உதவி செய்வது, பரிமாறுவது, கனமான பொருள்களை நகர்த்துவது, கோயில் வளாகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, இவையெல்லாம் WSH Experts நிறுவன ஊழியர்களின் அன்றாடப் பணிகளல்ல.

ஆனால் தைப்பூசத்தில் பங்கேற்ற அந்நிறுவன ஊழியர்கள் 150 பேர், சலிப்பின்றிச் சனிக்கிழமை (ஜனவரி 31) மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அவ்வேலைகளைச் செவ்வனே செய்தனர்.

-

அவர்களது முதலாளி, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தைப்பூசத்தில் பங்கேற்றுள்ளார். ஆனால், ஊழியர்களுக்கு இதுவே முதன்முறை.

“நாங்கள் பக்தியுடன் முருகனுக்காகச் செய்வதால், எந்த வேலையையும் தாழ்வானதாகக் கருதவில்லை,” என்றனர் நிறுவனத்தைச் சார்ந்த தீபக், கணேஷ். “அதிகமான மக்கள் வந்துள்ளதால் சற்றுக் கடினமாகத்தான் உள்ளது. இருந்தாலும் மகிழ்ச்சியாகச் செய்கிறோம்,” என்றார் ராகவன்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது என்பது, பாதைகள் எந்த அளவு சீராகப் பாதுகாப்பு வேலிகளால் வகுக்கப்பட்டுள்ளன என்பதையும், எவ்வளவு விரைவாகக் கூட்டம் கலைக்கப்படுகிறது என்பதையும் பொறுத்தது.

தைப்பூசத்துக்கு முன்தினம் இரவு முதல் தைப்பூச நாள் இரவு வரை ஓயாது, நெரிசலைப் போக்கக் கூட்டத்தினரிடம் உரத்த குரலில் அறிவுறுத்தினர் தொண்டூழியர்கள்.

உரத்த குரலில் அறிவிப்புகள் செய்த ‘சிங்கை ஃபிரண்ட்ஸ்’ தொண்டூழியர் அஜித்குமார்.
உரத்த குரலில் அறிவிப்புகள் செய்த ‘சிங்கை ஃபிரண்ட்ஸ்’ தொண்டூழியர் அஜித்குமார். - படம்: ரவி சிங்காரம்

அரவிந்தன் கிருஷ்ணன், அஜித்குமார், ஆனந்த், துரை போன்றோர் அவர்களில் சிலர். அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து வெளியேறும் வழியில் கூட்டநெரிசல் ஏற்படாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டனர். அவர்களைப் போன்ற தொண்டூழியர்களின் முயற்சியால் பக்தர்கள் பால்குடம் செலுத்த எடுத்துக்கொண்ட நேரம் குறைந்தது.

“தை பிறந்தால் வழி பிறக்கும். முருகன் அருளால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறக் கோயில் நிர்வாகம் வாழ்த்துகிறது,” என மக்களிடம் கூறி அவர்களை மகிழ்வித்தார் ‘சிங்கை ஃபிரண்ட்ஸ்’ குழுவின் தொண்டூழியரான அஜித்குமார்.

“2015லிருந்து நான் தொண்டூழியத்தில் ஈடுபடுகிறேன். பெரும்பாலும் காவடி பிரிக்கும் இடத்தில் தொண்டாற்றுகிறேன். இவ்வாண்டு சென்ற ஆண்டைவிடக் கூட்டம் அதிகமாக இருந்தது,” என்றார் அரவிந்தன்.

“பக்தர்கள் மகிழ்ச்சியாக இறைவனைத் தரிசனம் செய்து சென்றார்கள்,” என்றார் துரை.

கோயிலின் பாதைத் தடைகளை சரியான இடங்களில் வைப்பதில் முக்கியப் பங்காற்றினர் 26 வயது அடைக்கலம் தினேஷும் அவரது சக ஊழியர்களும்.

“நான் அரசகேசரி சிவன் கோயில் தொண்டூழியர்க் குழுவிலும் உள்ளேன். வார இறுதிகளிலோ விடுமுறைகளிலோ உணவைப் பரிமாறுவோம்,” என்றார் தினேஷ்.

கடும் வெயிலையும் களைப்பையும் சமாளிக்கப் பேருதவியாக இருந்தன ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தல்கள்.

நார்த்லேண்ட் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சரவணகுமார், திவியன் தம் குழுவினருடன், கோயிலிலிருந்து வெளியேறுவோருக்குக் கிட்டத்தட்ட 20,000 ரொட்டிகளையும் 20,000 தண்ணீர் போத்தல்களையும் விநியோகித்தனர்.

“உயர்நிலை மூன்றிலிருந்து என் பெற்றோருடன் தண்ணீர்ப் பந்தல்களில் உதவிவருகிறேன்,” என்றார் திவியன். தண்ணீர்ப் பந்தல் அமைக்கப் பத்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்துவருகிறார் குழு உறுப்பினர் இந்திரயோகன்.

தூக்கம் பாராது பால்குடங்களைத் தயாரித்த தொண்டூழியர்கள், இனிய நாதசுர இசை, தவில் வாசிக்கும் குழுவினர், மந்திரங்களை ஓதும் கோயில் ஐயர், பக்தர்களின் பக்கபலமான உறவுகள் என எண்ணற்ற நாயகர்களின் உழைப்பின் சங்கமமாய் விளங்கியது இவ்வாண்டின் தைப்பூசம்.

குறிப்புச் சொற்கள்