அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகளுக்கு வரிவிதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஆசியப் பங்குச் சந்தைகள் ஆட்டம்கண்டன.
திரு டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து முன்னதாக உலகளவில் பங்கு விலைகள் குறைந்தன. அதனைத் தொடர்ந்து ஆசியப் பங்கு விலைகளும் திங்கட்கிழமையன்று சரிந்தன.
திரு டிரம்ப்பின் வரிவிதிப்பு உலகப் பொருளியலை மந்தநிலைக்குத் தள்ளக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (எஸ்டிஐ) 8.57 விழுக்காடு சரிந்தது. அதன்படி திங்கட்கிழமை சிங்கப்பூர் பங்குச் சந்தை விற்பனைக்குத் திறந்துவிடப்பட்டபோது எஸ்டிஐ குறியீடு 328.0 புள்ளிகள் விழுந்து 3,497.66ஆகப் பதிவானது.
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி எஸ்டிஐ குறியீடு 8.9 விழுக்காடு சரிந்தது. திங்கட்கிழமை காணப்பட்ட சரிவு அதற்குப் பிறகு பதிவாகியிருக்கும் ஆக அதிகமான சரிவாகும்.
சரிவு, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தின் ஆரம்பகட்டமான 2020ஆம் ஆண்டு மார்ச் 23ல் காணப்பட்ட 8.4 விழுக்காடையும்விட அதிகமாக திங்கட்கிழமை பதிவானது என சிங்கப்பூர் பங்கு முதலீட்டாளர் சங்கத்தின் (sias) நிறுவனரும் தலைவரும் தலைமை நிர்வாகியுமான டேவிட் ஜெரால்ட் கூறினார். பின்னர் திங்கட்கிழமை நடுவில் எஸ்டிஐ குறியீட்டின் சரிவு, சற்று குறைந்து 8.1 விழுக்காடாகப் பதிவானது.
எஸ்டிஐ பங்குகள் அதிகமாக விற்கப்பட்டாலும் 2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின்போதும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலமான 2020 மார்ச்சிலும் காணப்பட்ட பதற்றம் இம்முறை இல்லை என்றார் சிங்கப்பூர் பங்குத் தரகர் பிரதிநிதிகள் சங்கத்தின் (Society of Remisiers (Singapore)) தலைவர் எஸ். நல்லகருப்பன்.
பங்குச் சந்தை சரிவதையும் மீண்டு வருவதையும் முதலீட்டாளர்கள் அதிகம் பார்த்திருப்பர்; அதனால் அவர்களுக்கு இப்போது நல்ல புரிதல் இருக்கும் என்று திரு நல்லகருப்பன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திங்கட்கிழமை காலை பதற்றத்தினால் பங்குகள் விற்கப்பட்டது, கணித முறைகளைக் கொண்டு நடக்கும் தானியக்க பங்கு விற்பனையாக (algorithmic trading) இருக்கும் என்றும் அவர் சுட்டினார்.
திங்கட்கிழமை நடுவில் டிபிஎஸ் பங்கு விலை 9.2 விழுக்காடு சரிந்து 39.02 வெள்ளியாக இருந்தது; யுஓபி பங்கு விலை 6.1 விழுக்காடு குறைந்து 33.29 வெள்ளியாகப் பதிவானது; Xசிபிசி பங்கு விலை 7.6 விழுக்காடு சரிந்து 15.35 வெள்ளியாக இருந்தது.
ஹாங்காங்கின் எச்எஸ்பிசி வங்கிப் பங்கு விலை 13.9 விழுக்காடு சரிந்தது; ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பங்கு விலை 16.7 விழுக்காடு வீழ்ச்சிகண்டது.