தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்-ஸி சந்திப்பு நிம்மதி தருகிறது: பிரதமர் வோங்

2 mins read
23404321-cf7c-47ee-b7b0-afab018057fe
சிங்கப்பூரும் மற்ற நாடுகளும் நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பவை அல்ல, மாறாகச் செயல்படக்கூடியவை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கியோங்ஜு: தென்கொரியாவின் பூசான் துறைமுக நகரில் வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க-சீன அதிபர்கள் சந்திப்பு, நல்ல முறையில் நிறைவுற்றது நிம்மதி தருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார். இருப்பினும் இரு வல்லரசுகளுக்கும் இடையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை என்றார் அவர்.

உலக அளவில் பொருளியல் ரீதியாக நாடுகள் வேறுபட்டு நின்று செயல்படும் போக்கு தொடரக்கூடும் என்று திரு வோங் சொன்னார். அதுவும் உலகளாவிய நிலையில் வெப்பம் உயர்வதைப் போன்றதுதான் என்று அவர் கூறினார். அது நடப்பது தெரியும், அதைத் தணிக்க நம்மால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றார் திரு வோங்.

சிங்கப்பூரும் மற்ற நாடுகளும் நடப்பவற்றை வேடிக்கை பார்ப்பவை அல்ல, மாறாகச் செயல்படக்கூடியவை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

“நாடுகள், ஏபெக் மாநாடு உட்பட மற்ற வழிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கமுடிந்தால், அத்தகைய போக்கைக் கையாள ஏதாவது செய்யமுடியும்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

அமெரிக்க-சீன அதிபர்களின் சந்திப்பு நடைபெற்றது மகிழ்ச்சியளித்ததாகக் கூறிய பிரதமர் வோங், உலகப் பொருளியலுக்கு அது சற்று நிலைத்தன்மையைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்.

ஆயினும் சந்திப்பால் ஏற்பட்ட விளைவுகள், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் தற்காலிகமாகத் தணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்தையே தருவதாகக் கூறப்பட்டது.

சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான சந்திப்பு, மாபெரும் வெற்றி என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். அரிய வகைக் கனிமப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்பதைச் சீனா உறுதிப்படுத்தியது.

சந்திப்பு ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்துவது மிகவும் தேவையானது, வரவேற்கக்கூடியது என்று பிரதமர் வோங் சொன்னார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டி மனப்பான்மை, சந்தேகம், நம்பிக்கையின்மை இவை எல்லாம் தொடர்கின்றன. ஒன்று மற்றொன்றிடமிருந்து தற்காத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும் தொடரும்,” என்றார் அவர். ஏபெக் தலைவர்கள் கூட்டத்தின் நிறைவில் சனிக்கிழமை (நவம்பர் 1) சிங்கப்பூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின்போது திரு வோங் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கியோங்ஜுவில் இருந்த நான்கு நாளில் பிரதமர் வோங், ஏபெக் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொண்டார். அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் அவர் இரு தரப்புச் சந்திப்புகளில் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்