இரண்டு ஆடவர்கள் காயமடையும் வகையில் ஆயுதத்தைக் கொண்டு தாக்கிய சம்பவத்தில் 24 வயது ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த வன்முறைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளவில் பிர்ன்செப் ஸ்திரீட்டில் இயங்கும் இரவு நேர மதுபானக் கூடமான ‘கிளப் வென்டேட்டா’ என்ற இடத்தில் நடந்தது.
ஜபேஸ் குனசேகரன் என்ற ஆடவர்மீது பயங்கர ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்வதால் அவர் காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடப்பதற்கு முன்பு, ஏற்கெனவே காவல்துறை மேற்பார்வை ஆணை பிறப்பிக்கப்பட்ட ஜபேஸ் கத்தி ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவியல் (தற்காலிக ஏற்பாடு) சட்டப்படி, அந்தக் காவல்துறை மேற்பார்வைக்கான ஆணை சமூகத்தில் ஒருவரை மூன்று ஆண்டுகள் வரை காவல்துறை கண்காணிப்பதற்கு வகை செய்கிறது.
காயமடைந்த 36 வயது ஆடவருக்கு தலையின் பின்புறம், இடது முன்கை, இடது மணிக்கட்டு ஆகிய உடற்பாகங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அன்றைய தினம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காயமுற்ற மற்றொரு ஆடவர் 25 வயதானவர். அவருக்கு இடது முன்கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஜபேஸ், அன்றே காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் கத்தியைக் கொண்டு நடத்தப்படும் குற்றச்செயல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 68 கத்தி தொடர்பான குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டன.
பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவிப்போர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் வழங்கப்படலாம்.
காவல்துறை கண்காணிப்பில் இருந்தபோது அவ்வாறான குற்றம் செய்வோருக்கு வழக்கமான சிறைத் தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.
