மோட்டார்சைக்கிள்கள் மீது கார் மோதியதில் இருவர் மருத்துமனையில்

மோட்டார்சைக்கிள்கள் மீது கார் மோதியதில் இருவர் மருத்துமனையில்

1 mins read
4e3eb239-0e65-4617-81da-48bedb5d216a
செங்காங் சாலைச் சந்திப்பில் மோட்டார்சைக்கிள்கள் மீது கார் மோதியதில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். - படம்: எஸ்ஜி ரோடு விஜிலான்டே/ஃபேஸ்புக்

செங்காங் சாலைச் சந்திப்பு ஒன்றில் போக்குவரத்துச் சமிக்ஞைக்காகக் காத்திருந்த இரு மோட்டார்சைக்கிள்களில் மீது கார் ஒன்று மோதியதில் இருவர் காயமடைந்தனர்.

ஒரு மோட்டார்சைக்கிளோட்டியும் அவருடன் அந்த மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் பயணம் செய்தவரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சிறு காயங்களுக்காக முதலுதவி சிகிச்சைபெற்ற மற்ற இருவர், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

செங்காங் ஈஸ்ட் அவென்யூ, கம்பஸ்வேல் ரோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நிகழ்ந்த விபத்து குறித்துக் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் அன்றிரவு 10.50 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளிகள், வலதுகோடித் தடத்தில் சென்றுகொண்டிருந்த கார், போக்குவரத்துப் பச்சை விளக்குச் சமிக்ஞைக்காகக் காத்திருந்த மூன்று மோட்டார்சைக்கிள்களில் இரண்டின் மீது மோதுவதைக் காட்டுகின்றன.

கார் மோதியதில் ஒரு மோட்டார்சைக்கிள் தலைகீழாகக் கவிழ்ந்தது. அதன் ஓட்டுநரும் அதனுடன் சேர்ந்து விழுந்தார். கார் இடது பக்கம் சுழன்று பின்னர் நின்றதைக் காணொளி காட்டுகிறது..

மோதிய வேகத்தில், மோட்டார்சைக்கிளின் பாகங்கள் பறந்து செல்வதையும் காணொளியில் காண முடிகிறது.

இச்சம்பவம் தொடர்பில் 28 வயது ஆண் கார் ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்