ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள ‘கிரேட் வோர்ல்டு சர்விஸ் அபார்ட்மென்ட்ஸ்’ அடுக்குமாடிக் கட்டடத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18வது மாடியிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவம் பற்றி மாலை 4.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.
தீயால் வீட்டின் சமையலறை சேதமடைந்ததையும் வீட்டின் மற்ற பகுதிகள் வெப்பத்தாலும் கருஞ்சாம்பலாலும் பாதிப்படைந்ததையும் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படங்கள் காட்டுகின்றன. தீச்சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லை. பக்கத்து வீடுகளிலிருந்த இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புகையை சுவாசித்ததற்காக அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் சம்பவ இடத்திலிருந்து ஏறக்குறைய 150 பேர் வெளியேறினர்.
சமையல் செய்த பாத்திரம் கவனிப்பின்றி விடப்பட்டது தீச்சம்பவத்திற்கு முக்கியக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சமைத்துக்கொண்டிருக்கும்போது அதனை கவனிப்பின்றி சிறிது நேரம்கூட விடக் கூடாது என்று அது பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவர அறிக்கையில், 2023ல் 1,954 தீச்சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இது, 2022ல் பதிவான 1,799 தீச்சம்பவங்களைக் காட்டிலும் 8.6 விழுக்காடு அதிகம்.