சிங்கப்பூரைக் குறிவைக்கும் இணையத் தாக்குதல்காரர்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்தத் தாக்குதல்களை மலிவாகவும் விரைவாகவும் நடத்துகின்றனர்.
இது நாட்டிற்கு மிகக் கடுமையான விவகாரம் என்றும், இங்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் அவசரமாகத் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தெரிவித்தார்.
ஈசூனில் சனிக்கிழமை (மே 9) நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், தொலைத்தொடர்பு போன்ற ஒருசில பிரிவுகள் அபாயத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.
தொலைத்தொடர்புக் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கியத் தகவல் கட்டமைப்புகளின் (Critical Information Infrastructure - CII) உரிமையாளர்கள் தங்கள் இணையப் பாதுகாப்பை அவசரமாக வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் கூறினார்.
“இதற்கான பொறுப்பு, நிறுவனங்களின் நிர்வாக அவையினர் நிலையில் எடுக்கப்பட வேண்டும். இது நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான வேலை மட்டுமன்று. ‘இதற்கு நாங்கள் பொறுப்பு’ என்பதை நிர்வாக அவையினர் கூற வேண்டும்,” என்றார் திரு சண்முகம்.
விமானப் போக்குவரத்து, சுகாதாரம், தரைவழிப் போக்குவரத்து, கடல்துறை, ஊடகம், பாதுகாப்பு மற்றும் அவசரச் சேவைகள், தண்ணீர், வங்கி மற்றும் நிதி, எரிசக்தி, தகவல்-தொடர்பு, அரசாங்கம் ஆகியவை இங்குள்ள 11 முக்கியத் தகவல் கட்டமைப்புத் துறைகளாகும்.
பிற நாட்டு அரசாங்கங்களின் ஆதரவு பெற்ற தரப்பினர் உட்படச் சிலரால் சிங்கப்பூர் இணையத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகத் திரு சண்முகம் கூறினார். மேலும், இத்தகைய குழுக்கள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் செயல்பாடுகளில் ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
2025-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் நான்கு முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய ‘யுஎன்சி3886’ இணைய அமைப்பைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த இணையத் தாக்குதல்காரர்கள் திறமையானவர்கள் என்றும் அவர்கள் உறுதியுடன் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
“அவர்களால் ரகசியத் தரவுகளைத் திருட முடியும். உங்களின் அத்தியாவசியச் சேவைகளைப் பாதித்திட முடியும். உங்கள் கணினி அமைப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்,” என்று திரு சண்முகம் தெரிவித்தார்.
“மிக அதிக வளங்களைக் கொண்ட, மிகவும் திறமையான தாக்குதல்காரர்களே மேம்பட்ட செயற்கை நுண்ணறிவை விரைவாக ஏற்றுக்கொண்டு, அதனைத் தங்கள் திறன்களுடன் ஒருங்கிணைப்பவர்களாக இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஆக மேம்பட்ட மாதிரிகளைக் குறிக்கும் ‘ஃபிரான்டியர் ஏஐ’ (Frontier AI) மாதிரிகளே முதன்மையான கவலையாக உள்ளன.


