பெய்ஜிங்: அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் ஏற்பாட்டுக்கு அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகளின் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) இதனைத் தெரிவித்தனர். அமெரிக்க, சீனத் தலைவர்கள் இவ்வாரம் சந்திப்பு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.
“ஒப்பந்தம் எப்படி அமையவேண்டும் என்ற தகவல்களை உறுதிப்படுத்தும் இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்கிறோம். பிறகு தலைவர்கள் அத்தகைய ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து முடிவெடுக்கலாம்,” என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ஜேமிசன் க்ரியர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்துவதில் சீனாவின் முன்னணி அதிகாரியான லி செங்காங், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை இயல்பான முறையில் பல முக்கிய அம்சங்களை ஆராய்ந்ததாகக் கூறினார். இரு தரப்பும் முதற்கட்ட ஒப்புதலை எட்டிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், ஆசியான் தலைவர்கள் சந்திப்புக்காக கோலாலம்பூர் சென்றுள்ளனர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் தமது ஒரு வார ஆசியப் பயணத்தின் முதற்கட்டமாக இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
பிறகு திரு டிரம்ப், தென்கொரியாவில் நடைபெறவுள்ள வேறு பொருளியல் சந்திப்பில் வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 30) சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு வர்த்தகத் தொடர்புகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், ஃபென்டனைல் தொடர்பான வரிவிதிப்பு, ஃபென்டனைல் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கோலாலம்பூரில் கலந்துபேசப்பட்டதாக சீனத் தரப்பு தெரிவித்தது.
அரியவகை மண் தாதுக்கள் (rare earth metals) குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக திரு க்ரியர் குறிப்பிட்டார். அரியவகை மண் தாதுக்கள் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தியாகின்றன.
அவற்றை ஏற்றுமதி செய்ய பெய்ஜிங் இவ்வாண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


