தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் - அமெரிக்கா உறவு நல்வழியில் வலுப்பெறும்: பிரதமர் வோங்

2 mins read
7588c1f6-4f04-48c3-a687-d73a8ec9abe4
வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தேசிய ஊடக நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் - அமெரிக்கா இருதரப்பு உறவு நல்ல முறையில் வளர்ச்சி பெறும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நவம்பர் 8ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “அமெரிக்காவுடனான உறவு முக்கியம் வாய்ந்தது, தொடர்ந்து நல்வழியில் அதனை வலுப்படுத்துவோம்,” என்று திரு வோங் கூறினார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக அடுத்த ஆண்டு டோனல்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இருநாட்டு உறவுகள் குறித்து அவர் பேசினார்.

இந்த ஆண்டு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடப்புக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளதைப் பிரதமர் சுட்டினார்.

“சிங்கப்பூர் - அமெரிக்கா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக இருதரப்பும் பெரிதும் பலனடைந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு அதிகளவிலான நல்ல வேலை வாய்ப்புகளை அது அளித்துள்ளது,” என்றார் திரு வோங்.

எதிர்காலத்திலும் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து நம்பிக்கை தெரிவித்த பிரதமர், பாதுகாப்பு மட்டுமல்லாது, பொருளியல் சார்ந்த ஈடுபாடுகளிலும் மேலும் கவனம் செலுத்த எண்ணம் கொண்டுள்ளதாகவும் சொன்னார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவு சவால் மிகுந்த இடத்தில் உள்ளதைச் சுட்டிய திரு வோங், தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார்.

சிங்கப்பூர், சீனாவுடனான உறவைப் பாராட்டும் வேளையில், பசிபிக் வட்டார சக்தியாகத் திகழும் அமெரிக்காவுடனும் அணுக்கமாகச் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இருதரப்பு உறவு குறித்த தமிழ் முரசின் கேள்விக்குப் பதிலளித்த திரு வோங், அடுத்த ஆண்டு தாம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று கூறினார். அதோடு, இந்தியா - சிங்கப்பூர் இருதரப்பு உறவு அடுத்த ஆண்டு 60வது ஆண்டு நிறைவடைய உள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார். 

“அண்மையில் இந்தியப் பிரதமர்  சிங்கப்பூர் வந்தபோது எந்தெந்த துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 

“குறிப்பாக திறன் மேம்பாடு, இந்தியா நாடிடும் திறன்பயிற்சிகள், பகுதி மின்கடத்திகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காளித்துவத்தை மேம்படுத்த தமது பயணத்தின்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று திரு வோங் சொன்னார்.

வெளிநாட்டுக் கொள்கைகள் சார்ந்த விவகாரங்கள் சிங்கப்பூரர்களின் அக்கறையில் முன்னணி இடம்பிடிக்காமல் இருக்க நேர்ந்தாலும், நாடு செழித்திட, சிங்கப்பூரர்களின் நலனை வெளிநாடுகளில் மேம்படுத்த வெளியுறவுக் கொள்கைகள் இன்றியமையாதவை என்று அவர் சொன்னார்.

தற்போதுள்ள அனைத்துலகச் சூழல், அரசியல் மாற்றங்கள், உக்ரேன், காஸா போர், அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றங்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், பங்காளித்துவ மற்றும் நட்பு நாடுகளுடனான உறவை வலிமையாக்க சிங்கப்பூர் மேலும் கடுமையாகச் செயலாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“உள்ளூர் அல்லது வெளிநாட்டு விவகாரங்கள் என எதுவாக இருப்பினும், முடிவில் அவை அனைத்தும் சிங்கப்பூரர்களுக்கு எப்படிச் சிறப்பான வாழ்க்கையை நல்கிட முடியும் என்பதைச் சார்ந்தே இருக்கும். நானும் என் குழுவும் அதில் கவனம் செலுத்துகிறோம்,” என்று கூறினார் பிரதமர்.

குறிப்புச் சொற்கள்