பருவநிலை மாற்றம் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்காசிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு வரை இழப்பு ஏற்படக்கூடும்.
ஆனால் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள நீண்ட ஆறுகள், பெரிய ஏரிகள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினால் இழப்பைத் தவிர்க்கலாம் என்று புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை உலகப் பொருளியல் கருத்தரங்கும் சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளன.
சக்திவாய்ந்த புயல்கள், உயரும் கடல் மட்டம், வெப்ப அலைகள் ஆகியவற்றிடமிருந்து தற்காத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நேரம் வந்துவிட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான வானிலையால் ஏற்படும் நிகழ்வுகளில் ஏறத்தாழ 90 விழுக்காடு நீருடன் தொடர்புடையவை.
வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகமாகும்போது அது கடுமையான புயல்கள் உருவாவதற்கான எரிசக்தியாக மாறிவிடுகிறது.
வெப்ப அலைகள், காட்டுத் தீ ஆகியவை வறட்சியால் ஏற்படுகின்றன.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகள் விரைவாகத் தயாராகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முயற்சிகளுக்கு தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை. அவற்றுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று திங்கிட்கிழமை (ஜூன் 23) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடல் மட்டம் அதிகரித்தல், கடும் வெப்பம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சூழலுக்கு ஏற்றவாறு சரிசெய்துகொள்ளும் தேசிய அளவிலான திட்டத்தைத் தயார்செய்யும் நாடுகளில் சிங்கப்பூரும் அடங்கும்.

