சக்கர நாற்காலி பயன்படுத்தும் பெண் நீர்த்தேக்கத்தில் விழுந்ததில் உயிரிழப்பு

1 mins read
943b70ed-f38b-43be-a268-dbedd2500300
மார்ச் 22ஆம் தேதி, லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் விழுந்த பெண் உயிரிழந்தார். - படம்: கூகல் மேப்ஸ்

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்தார் என்றும் அவர் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சீருடை அணிந்திருந்த அதிகாரிகள் பலர் காணப்பட்டதாக அவ்வழியே சென்ற வெய் என்பவர் கூறினார். அந்த ஆடவர் தனது முழுப்பெயரை வெளியிடவில்லை.

யாரோ நீரில் விழுந்ததைக் கேள்விப்பட்டதாக அவர் ஷின் மின் நாளேட்டிடம் கூறினார்.

புல் சரிவில் சக்கர நாற்காலி ஒன்றைக் காணமுடிந்ததாகவும் அங்குக் கூடியிருந்தோர் மிக அருகில் செல்வதை அதிகாரிகள் தடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சனிக்கிழமை நண்பகல்வாக்கில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பதிலளித்ததாக ஏஷியாஒன் செய்தி இணையத்தளம் கூறியது.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது மாது ஒருவரின் உடல் நீரில் மிதப்பதைக் கண்டதாகவும் சுயநினைவற்ற நிலையில் அந்த 55 வயதுப் பெண்ணை மீட்டு, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

மருத்துவமனை சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என்று காவல்துறை கூறியது.

முதற்கட்ட விசாரணையில், தவறு ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்று அது தெரிவித்தது. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்