சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) இரவு 8.40 மணியளவில் தெங்காவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கான்கிரீட் பீய்ச்சுகுழாய் தாக்கியதில் தமிழக ஊழியர் அருள்ராஜ் அரிதாசலு, 29, உயிரிழந்தார்.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், முடிகண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அவர், சிங்கப்பூரில் ‘கியோங் ஹோங்’ கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இச்சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிய, மனிதவள அமைச்சை தமிழ் முரசு தொடர்புகொண்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சின் பேச்சாளர், சம்பவம் நடந்த நாளில் கான்கிரீட் பீய்ச்சு வாகனத்தைப் (concrete pump truck) பயன்படுத்தி கான்கிரீட் பூச்சுப் பணிகளை திரு அருள்ராஜ் செய்துகொண்டிருந்ததாகக் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது, அவ்வாகனத்தின் நான்கு வெளிப்புற பளுதூக்கும் அமைப்புகளில் ஒன்று, அது நிலைகொண்டிருந்த கான்கிரீட் தரையில் துளைத்ததாகவும் இதனால் இயந்திரம் சாய்ந்து, வாகனத்தின் கான்கிரீட் குழாய் திரு அருள்ராஜை தாக்கியதாகவும் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சம்பவம் நிகழ்ந்த தெங்கா கட்டுமானத் தளத்தில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) ‘பிளான்டேஷன் எட்ஜ் I & II’ திட்டப்பணிகள் நடைபெற்று வந்ததாக வீவகவின் அறிக்கை கூறியது.
திரு அருள்ராஜின் மார்பில் குழாய் தாக்கியதால் காயமுற்ற அவர் கிளெனீகல்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், திரு அருள்ராஜின் குடும்பத்துக்கு வீவக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது. இச்சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மீளாத் துயரில் குடும்பத்தார்
திங்கட்கிழமை (ஐனவரி 5) அதிகாலை தமிழகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு அருள்ராஜின் உடல், அவரது சொந்த கிராமமான முடிகண்டநல்லூரில் அன்றைய தினம் தகனம் செய்யப்பட்டது.
திரு அருள்ராஜின் பெற்றோரான திரு அரிதாசலு, திருவாட்டி அமுதா இருவரும் விவசாய வேலை செய்து வருவதாகக் கூறிய அவரின் நண்பர்கள், அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
திரு அருள்ராஜின் இளம்பருவத் தோழரும் சிங்கப்பூரில் பணியாற்றி வருபவருமான திரு பிரபாகரன், நண்பர் மறைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
“ஐந்து வயதிலிருந்தே எனக்கு அருள்ராஜை தெரியும். ஆனால், ஈராண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் நான் அவரை கடந்த டிசம்பர் 29ஆம் தேதிதான் சந்தித்தேன்.
“நண்பனைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி தாளவில்லை. நான் அழைத்தவுடன் அருள் என்னுடன் தேவாலயத்துக்கு வந்தார். பிறகு தைப்பூசத்திற்கு மாலை போடவேண்டும் என்று கூறியதால் இருவரும் அதற்கான பொருள்களை வாங்கினோம்.
“கடுமையாக உழைத்து சொந்த ஊரில் சிறு வீடு ஒன்றைக் கட்டியதாக சொன்ன அருள், புதிய ஆண்டில் திருமணம் செய்யும் திட்டம் இருந்ததாகத் தெரிவித்தார். பிறகு ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) மீண்டும் சந்திக்கலாம் என்று இருவரும் சென்றுவிட்டோம்.
“ஆனால், இந்த ஆண்டில் மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய நண்பரை பிணக்கோலத்தில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இறுதியாக ஜனவரி 4ஆம் தேதி மாலை அணிவித்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன்,” என்றார் திரு பிரபாகரன்.
சிங்கப்பூரில் சேவைத் துறையில் பணியாற்றிவரும் திரு தீலிபன், “உயிரிழந்த அருள்ராஜ் உழைப்பால் உயர்ந்த சிறந்த உள்ளம்,” என்று கூறினார்.
“குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என்பதால் பொறுப்புடன் பெற்றோரைக் கவனித்து வந்தார். அருள் மரியாதையுடன் பழகும் விதத்தை காலத்தால் அழிக்க இயலாது,” என்று அஞ்சலி செலுத்தினார் திரு தீலிபன்.