ஈசூன் வட்டாரத்தில் வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் ஆடவரின் மனநலம் தொடர்பில், மனநல மருத்துவரிடம் விளக்கம் கேட்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மாத்திரைகளை உட்கொண்ட பிறகு, வீட்டு உரிமையாளரை மூன்று கத்திகளையும் ஒரு வெட்டுக் கத்தியையும் கொண்டு கொடூரமாகத் தாக்கிய 52 வயது அஃபெண்டி யூசோஃபுக்கு அந்த நேரத்தில் மனநிலை சரியில்லை என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
அதனால் அவரை விடுவிக்குமாறு வியாழக்கிழமை (அக்டோபர் 29) அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
ஆனால், மனநல மருத்துவர் அளித்த முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றும் மூன்று அறிக்கைகளையும் ஏற்பது கடினமாக உள்ளது என்று நீதிபதி பிலிப் ஜெயரத்னம் கூறினார். இருமல் மருந்தான டெக்ஸ்ட்ரோமெத்தார்ஃபான் உட்கொண்டபோது அவர் மனநிலை குழம்பி இருந்தாரா என்பதுபற்றி அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன.
“சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், குற்றவாளி அவர் செய்த செயலின் தன்மையை அறியவில்லை என்பதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை,” என்று நீதிபதி கூறினார்.
நீதிமன்றத்தில் மனநல மருத்துவரிடம் விசாரணை நடத்த விரும்பிய நீதிபதி, வழக்கின் விசாரணையைப் பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்தார்.
2024ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஈசூன் ரிங் ரோடு புளோக் 803ல் சம்பவம் நிகழ்ந்தது. வாடகை வீட்டில் தங்கியிருந்த 35 வயது ஃபிக்ரி சூ இஸ்கந்தர் என்பவரைக் கத்தியால் தாக்கி மரணம் விளைவித்ததாக அஃபெண்டி யூசோஃப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் செயல் என்ற குறைக்கப்பட்ட குற்றச்சாட்டை அஃபெண்டி அக்டோபர் 29ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
குற்றம் நடந்த நேரத்தில் அவர் மனநிலை சரியின்றி இருந்தார் என்பதை அரசாங்க, தற்காப்புத் தரப்புகள் இரண்டுமே ஏற்றுக்கொண்டன.
தனது செயல்களின் தன்மையை அறியும் திறன் அஃபெண்டிக்கு இல்லாததால், சட்ட நடைமுறைப்படி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் நிக்கோலஸ் வுவான் கேட்டுக்கொண்டார்.
தாக்குதல் நடப்பதற்கு முன்னர், அஃபெண்டி 90க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்பட்டது. சம்பவ நேரத்தில் அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து தெளிவு தேவைப்படுவதாக நீதிபதி பிலிப் ஜெயரத்னம் தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மனநல மருத்துவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
