தாஷாயனி சுகேந்திரன்
ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் தீமிதித் திருவிழாவில் பெரியவர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களும் பக்தி உணர்வோடு தொண்டாற்றி வருகின்றனர்.
இசைவழி தொண்டாற்றும் சிலர், பண்பாட்டு மரபைத் தொடரும் தூண்களாகத் மிளிர்கின்றனர்.
வெஸ்ட்குரோவ் தொடக்கப் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவர் மனோஜவம் ஸ்ரீ, கூடியிருந்த பக்தர்களைத் தமது தவில் வாசிப்பால் மகிழ்விக்கிறார்.
பஜனை வழிபாடுகளில் ஈடுபடும் தாயாரோடு சென்றபோது தவில் மீதான ஈர்ப்பு அவருக்கு வளர்ந்தது.
ஏழு வயதிலிருந்தே தவில் வாசிக்கக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய மனோஜவம். அவரது அவரது குடும்பத்தில் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்த ஒரே ஒருவரும் இவர்தான்.
‘ஸ்ரீ சிவ சாஸ்தா பஜன்ஸ்’ குழுவில் இணைந்து பல மணி நேரம் உற்சாகமாக வாசிப்பில் ஈடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். “தீமிதி விழாவில் தவில் வாசிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இத்திருவிழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் மனோஜவம். தீமிதி திருநாளின்போது ஸ்ரீ சுந்தர விநாயாகர் சந்நிதியில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடி வருவதாகக் குழுவினர் தெரிவித்தனர். இளங்கலைஞர்களுக்கு இத்தகைய பெருவிழாக்கள்மூலம் அனுபவக்களம் அமைத்துக் கொடுப்பதே தங்களின் நோக்கம் என்று குழுத் தலைவர் ஜெயத்ரேய சரவணன், 45, கூறினார்.
இவரைப் போல, ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளியில் பயிலும் 12 வயது மாணவர் கதிரவன் இளங்கோகுலனும் தொண்டூழியராகத் திகழ்கிறார். வடபத்திர காளியம்மன் கோயில் தொண்டர் குழுவைச் சேர்ந்த, தம்மைவிட வயதில் மூத்த தொண்டூழியர் ஒருவரின் ஊக்குவிப்பாலும் வழிகாட்டலாலும் உற்சாகமடைந்து முதல்முறையாகத் தீமிதி விழாவில் அவர் தொண்டூழியம் புரிந்தார்.
பெரியாச்சி அம்மன் சந்நிதிப் பகுதியில், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி வழிகாட்டும் பணியில் மும்முரமாக அவர் ஈடுபட்டார். “எல்லாருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைத்துவிடாது. மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து தொண்டாற்ற விரும்புகிறேன்,” என்றார் இளங்கோகுலன்.
