சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை நாளில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், சிறார்கள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) தமிழகத்தில் 3 ரவுடிகள், 2 சிறுவர்கள், இளம் பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி சமதர்மபுரம் அருகே பட்டாசு வெடித்து ‘ரீல்ஸ்’ எடுத்த போதைக் கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். அதன் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி சமயபுரத்தில் அன்றாட ஊழியர்களான ராகுல், 17, விஷால், 17 ஆகியோர் முன்விரோதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டனர். திருச்சியில் ஐடி ஊழியர் கிறிஸ்டோபர், 20 என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.
கடலூரில் மது அருந்திய தகராறில் ரவுடி பிரிதிவிராஜ் கொல்லப்பட்டார். அதன்தொடர்பில் தலைமறைவான ரவுடி அருளரசைக் காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
சிவகங்கை மானாமதுரையில் பிணையில் வந்த ரவுடி விக்னேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது நண்பர் முனியாண்டி ஆபத்தான நிலையில் உள்ளார். கல்லல் அருகே ரவுடி நவீன் என்பவரும் கொல்லப்பட்டார். திருவள்ளூரில் ஆந்திரப் பெண் மேகலாவை, 24, குத்திக்கொன்ற பிரசாத் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் அண்ணனைத் தாக்கியவர்களை தட்டிக் கேட்ட 19 வயது ஆட்டோ ஓட்டுநர் தனுஷை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
மதுரையில் பட்டாசு வெடித்த தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அரிவாளால் வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் தவெக அரசு மீது சரமாரியாகக் குற்றம்சாட்டியுள்ளன.
கொல்லப்பட்ட செந்தில்குமார் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 40 லட்சம் போதாது என்றும், அக்டோபர் 14 அரசு ஆணைப்படி ரூ. 1 கோடி நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
