11 மாதங்களில் 2.7 கோடி பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்தினர்

2 mins read
ca7e96ac-0408-45bb-96ab-039ec72610a2
சென்னை விமான நிலையம். - படம்: தி ஃபெடரல்

சென்னை: கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 2.7 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த 11 மாதங்களில் 1.17 கோடி உள்நாட்டு பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

முந்தைய 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் எண்ணிக்கை 24.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு 53 லட்சமாக இருந்த அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை தற்போது 75.4 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும், இது 42.3% வளர்ச்சி என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை விமான நிலைய சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் சென்னையில் இருந்து, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சின், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் தற்போது மூன்று முனையங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ஏறக்குறைய 55,000 பேர் அங்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டைவிட தற்போது பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் 3.50 கோடி பயணிகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த இலக்கு எட்டப்படவில்லை என்றாலும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘கொவிட் 19’ காலகட்டத்திற்கு முன்பு வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு சென்னையில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் தொற்றுப் பரவலுக்குப் பிறகு அந்த விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அச்சேவைகளை மீண்டும் தொடங்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்