சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஐவரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில், நட்சத்திரத் தங்குவிடுதியில் நடைபெற்றது.
அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களாகச் செயல்பட்ட சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் விலகியது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் சி. விஜயபாஸ்கர்.
கரூரைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இருவரும் உட்கட்சிப் பூசல் காரணமாக அண்மையில் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, இருவரும் தவெகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இருவரும் தவெகவில் இணைந்தனர்.
இதே நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆனந்த், வளர்மதி ஆகியோரும் முன்னாள் எம்எல்ஏக்கள் ஐவரும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சி. விஜயபாஸ்கர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று தங்களைப் போன்றோர் கூறியதை அதிமுக தலைமை ஏற்கவில்லை என்றார். மேலும், அதிமுக ஒரு பெருநிறுவனம்போல் மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
இதனிடையே, அதிமுகவிலிருந்து மேலும் சில முக்கியமான தலைவர்கள் விலக இருப்பதாக கூறப்படும் நிலையில் மிக விரைவில் டெல்டா பகுதியில் பிரம்மாண்டமான இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

