போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையில் 621 பேர் கைது

போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையில் 621 பேர் கைது

1 mins read
0b31d3e0-1819-42ca-a307-8d81af495500
மூன்று நாள்களில் மட்டும் ஏறக்குறைய 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  - சித்திரிப்புப் படம்: தினமணி

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஏறக்குறைய 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஜூலை 3ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு மாநிலம் முழுவதும் சிறப்பு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர வாகனத் தணிக்கை, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகள், கண்காணிப்பு-நுண்ணறிவுத் தகவல் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவில் 621 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக 296 கிலோ கஞ்சா, 1.3 கிலோ பிற போதைப்பொருள்கள், 802 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,650 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள்கள், மனோவியல் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூட்டு முயற்சிகள் மூலம் போதைப்பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதில் தமிழ்நாடு காவல்துறை தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் எனச் செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்கஞ்சாநடவடிக்கைபறிமுதல்காவல்துறைவழக்குபுகையிலை