மாற்றுக் கட்சியினரைப் போற்றி வரவேற்கும் கலாசாரம் திராவிடக் கட்சிகளிடம் எப்போதும் உண்டு. மக்கள் திலகம் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது திமுக தலைவர்கள் பலரும் அவரது பின்னால் சென்றார்கள். அந்தக் கட்சித்தாவல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீடித்தது.
எம்ஜிஆர் மறைவு வரை கட்டுக்கோப்பாக இருந்த கழகம், ஜெயலலிதா காலத்தில் திமுகவை நோக்கித் தலைவர்கள் செல்லத் தொடங்கினர். முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் திமுகவுக்குச் சென்றபோது முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசு தனிக்கட்சி தொடங்கினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் அதிகாரம் நீடிக்க, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனி அணியாகச் செயல்பட்ட வேளையில், அதிமுகவின் சாயலில் சிறுசிறு கட்சிகள் முளைத்தன. டிடிவி தினகரனின் அமமுக தொடங்கி, அண்மையில் சசிகலா உருவாக்கிய அஇபுதமமுக வரை எட்டுக் கட்சிகள் உதயமாயின.
அது போதாதென்று அதிமுகவின் மேல்மட்டத் தலைவர்களும் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். செந்தில் பாலாஜி போன்ற பலர் திமுகவில் அடைக்கலம் அடைந்த நிலையில் நயினார் நகேந்திரன் பாஜகவுக்குத் தாவினார்.
இந்தத் தேர்தலில், அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிகளுக்குச் சென்ற பலரும் வேட்பாளர்களாகி உள்ளனர். 164 திமுக வேட்பாளர்களில் ஓபிஎஸ் உட்பட 19 பேர் அதிமுகவிலிருந்து வந்தர்கள். இது 11.6 விழுக்காடு. அதேபோல, கே.ஏ. செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன் போன்ற எட்டு அதிமுக பிரபலங்கள் விஜய்யின் தவெக வேட்பாளர்களாகி உள்ளனர்.
வந்து சேரும் அதிமுக தலைவர்களை ஓரங்கட்டாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனும் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கிணங்க, பதவி கொடுத்து கட்சி வளர்ச்சிக்கு அவர்களைப் பயன்படுத்துவது திமுகவின் பாணியாக இருக்கிறது. 32 பேரைக் கொண்ட திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜியையும் சேர்த்தால் 8 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள். அதாவது, நான்கில் ஓர் அமைச்சர் முன்னாள் அதிமுக பிரபலம்.
இன்றைய நிலைமையில் திமுகவின் முக்கிய முடிவுகளைக்கூட அக்கட்சியில் ஐக்கியமான சேகர் பாபு, செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, ரகுபதி என்னும் நான்கு முன்னாள் அதிமுகவினரே எடுக்கிறார்கள் என்பது அறிவாலய வட்டாரத் தகவல். திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்கள் புகுந்த கட்சிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக விசுவாசமாக இருப்பதைக் காணமுடிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிகமானோர் வெளியேறியதுபோல கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவிலிருந்து பெரிதாக பலர் மாற்றுக் கட்சிகளுக்கு மாறவில்லை. கட்டுக்கோப்பாக இருக்கும் கட்சியில் நெளிவு சுளிவுகள் இருக்கும்; கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காணப்படும். அதிமுக தலைமை அதிலிருந்து மாறுபடுவதால்தான் பலரும் வெளியேறுகிறார்களோ என்று நடுநிலையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது எடப்பாடி பழனிசாமி அதில் இணைந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி அதிமுக கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு கே.ஏ. செங்கோட்டையனின் அறிமுகத்தால் அவருக்குக் கிடைத்தது என்பதும் அதன்பிறகே பழனிசாமியின் அரசியல் ஏற்றம் தொடங்கியது என்பதும் வரலாறு. அதேபோல, 2017ல் முதல்வர் அரியணையில் பழனிசாமியை அமரவைத்த வி.கே.சசிகலா, அந்தக் கட்சியில் இடமில்லாததால் புதிய கட்சியைத் தொடங்கியிருப்பது புதிய வரலாறு.
அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக தலைமை எவ்வளவோ முயன்றும், பிரிந்தவர்கள் பிரிந்தவர்களாகவே இருந்துவிட்டதால், அதன்மூலம் மாற்றுக் கட்சிகள் பலனடைவதை இந்தத் தேர்தலில் காணமுடிகிறது. -திருநா

