உதகை மலர்க் கண்காட்சியில் ஏழு லட்சம் பூக்களைக் கொண்டு அலங்காரம்

உதகை மலர்க் கண்காட்சியில் ஏழு லட்சம் பூக்களைக் கொண்டு அலங்காரம்

2 mins read
59dabc0b-cf14-4e89-b24c-a69a2c2992bf
மலர்களைக் கொண்டு அருவி போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மலர் மாடத்தில் பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. - படம்: டிடிநியூஸ்
multi-img1 of 2

நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி துவங்கியது.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பூக்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்களுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலைத் தாக்குப்பிடிக்க இயலாமல், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண சுற்றுப்பயணிகள் உதகைக்கு வருகை தருவர். அந்த வகையில் இந்த ஆண்டும் சுற்றுப் பயணிகள் அங்கு குவிந்துள்ளனர்.

இவர்களை மகிழ்விக்கும் விதமாகவும் மாநிலத்தின் சிறப்புகளை விவரிக்கும் விதமாகவும் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி தொடங்கி உள்ளது.

தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக, 275 வகையான விதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்பட பிற நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்ச் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் உள்ளன.

மலர்களைக் கொண்டு அருவி போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மலர் மாடத்தில் பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகள் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

“தமிழ் மரபுகள் குறித்த 30 மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களைக் வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் பெருமையை விளக்கும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்று தோட்டக்கலை துணை இயக்குநர் பெபீதா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்