ஆண்டு இறுதிக்குள் அதிமுக இணையும்: ஓபிஎஸ் ஆதரவாளர் கருத்து

1 mins read
2d79cea6-a1ff-46de-a6fb-53526439e845
ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம். - படம்: தமிழக ஊடகம்

தஞ்சாவூர்: வரும் 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும். 2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக தொண்டர்கள் 99.9 விழுக்காட்டினர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புவதாக ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

“எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒன்றிணையக்கூடாது என நினைப்போர் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்பது அதிமுக ஒன்றிணையும்போது முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும். 2026ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும், எழுதி வைத்துக்கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.

“கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை வைத்து, பழனிசாமி அதிமுகவை அழித்து விடுவார் என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இன்றைக்கு மோசமான நிலைக்கு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளதை நினைத்துதான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம்” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்