பாஜக தலைமையில் ஓர் அணி; அதிமுகவைக் கிண்டல் செய்த விஜய்

பாஜக தலைமையில் ஓர் அணி; அதிமுகவைக் கிண்டல் செய்த விஜய்

2 mins read
ddd72d29-db49-4ad2-b0c5-6a7231d15e6f
தவெக மூன்றாம் ஆண்டு விழாவில் நடனமாடித் தொண்டர்களை மகிழ்வித்த விஜய். - படம்: நியூஸ்18

சென்னை: தமிழகத்தில் தவெக தலைமையில் ஓர் அணியும் திமுக தலைமையில் ஓர் அணியும் பாஜக தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவில் பேசிய அவர், பாஜக அணி என்று குறிப்பிட்டதன் மூலம் அதிமுகவை மறைமுகமாகக் கிண்டலடித்தார்.

திமுக தீய சக்தி என்றால், அதிமுக ஊழல் சக்தி என்றும் தவெக தொண்டர்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்றும் விஜய் கூறினார்.

தொண்டர்களை மட்டும் நம்பி தானும் தமிழக வெற்றிக் கழகமும் செயல்படுவதாகக் குறிப்பிட்ட விஜய், தமிழகத்தில் விசில் சின்னம் சென்றடையாத ஊரே இல்லை என்றார்.

“2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு என, தமிழ்நாட்டின் நிலைமையை மக்கள் யோசித்துப் பார்க்கின்றனர். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இவர்களும் இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

“இந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தவெக. இப்படிப் பேசினால் சிலர் கொந்தளிப்பார்கள். அதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது,” என்றார் விஜய்.

தாம் ஊடகங்களிடம் பேசுவதில்லை என்றும் டெல்லி அரசை விமர்சிப்பதில்லை என்றும் சிலர் கிண்டல் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், ‘இப்போது விஜய்க்கு என்ன அனுபவம் உள்ளது என்று கேட்பவர்கள்தான், முன்பு எம்ஜிஆரையும் இதேபோல் பேசினர்’ என்றார்.

எத்தனை அணிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால்தான் முடியும் என்றார் அவர்.

“விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கின்றனர். தேர்தலில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு விஜய் வாக்களிப்பார். விஜய்யை ஏன் அழைத்தோம் என்று அன்றைய தினம் அவர்கள் வருத்தப்படுவார்கள்,” என்றார் விஜய்.

குறிப்புச் சொற்கள்