சென்னை: மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு பகுதிகளிலும் வாசலில் பெண்கள் கோலமிட்டனர்.
கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படாததால் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக, தமிழகத்தில் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அரசியல் கட்சிகள் என அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை (பிப்ரவரி 19) கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இந்தியை எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க மாட்டோம். மீண்டும் தமிழகத்தில் மொழிப் போரை மத்திய அரசு உருவாக்கக்கூடாது. நாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அதை முடிவு செய்யக்கூடாது என்று மாணவர்கள் கூறினர்.
பெண்கள் கோலமிட்ட காணொளியைப் பகிர்ந்து, பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி குறித்த சர்ச்சை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. அதாவது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கெனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பாஜக, அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.