புதுடெல்லி: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவு வெளியிடப்படும். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கும்.
அதேபோல் புதுவை, கேரள, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.
ஐந்து மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.
ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநில அரசியல் சூழல் மேலும் சூடுபிடிக்கிறது.
மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் நடைபெற உள்ள ஐந்து இந்திய மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்காக 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
25 லட்சம் தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர் என்றார் திரு ஞானேஷ் குமார்.
தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் இம்முறை 5.67 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வேட்பாளர் தேர்வுப் பணிகளில் திமுக தீவிரமாக உள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்த உள்ளார்.
அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைக்கப்பட்டு, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காண்கிறது. தனித்துப் போட்டியிடத் தயாராகியுள்ள நாம் தமிழர் கட்சி, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
இந்த முறை ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள சூழலில், சட்டமன்றத் தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்புக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வருகின்றன. முடிவுகள் வெளியாகும் வரையில் தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் இருக்கும்.
தேர்தல் முடியும்வரையில், அடிக்கல் நாட்டுதல் விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் என எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது.
அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படக்கூடாது.
பேரிடர் அல்லது அவசர காலங்களைத் தவிர்த்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது.
அரசின் செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுவதுடன், அனைத்து அரசுக் கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் சம்பந்தப்பட்டவை மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றப்பட வேண்டும்.
பிரசாரத்தின்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தவிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றிய தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது.
கட்சிப் பாகுபாடின்றி, பொதுத் திடல்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
வாக்குகளைப் பெறுவதற்காக, குறிப்பிட்ட சாதியையோ மத உணர்வுகளையோ தூண்டும்வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கை அல்லது தகுதி நீக்கத்துக்கு வழிவகுக்கும்.
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்கள் அச்சுறுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை தேர்தல் சட்டத்தின்கீழ் ஊழல் நடைமுறைகளாகக் கருதப்படும்.

