சென்னை: தேர்தலுக்கான வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு காரணமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தவெக தலைவர் விஜய்யும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் சொத்து மதிப்பை ரூ.100 கோடி அளவுக்குக் குறைத்துக் காட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விஜய்யின் இச்செயல் முறைகேடானது எனக் கருத்து தெரிவித்திருப்பதுடன், வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய். இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி பெரம்பூர் தொகுதி வாக்காளரான விக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.115 கோடி எனவும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில் ரூ.220 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
“இது உண்மைத் தகவலை மறைத்ததற்குச் சமமாகும். எனவே, உரிய விசாரணை நடத்தவேண்டும்,” என விக்னேஷ் கோரியுள்ளார்.
இம்மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, 100 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டியது முறைகேடானது என்றும் இது தேர்தல் விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, திரு உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கு விவரங்கள் மட்டுமே தங்கள் வசம் இருப்பதாகவும் மேலும் ஆதாரங்களைச் சேகரிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி குமாரவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி வாக்காளராவார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020ஆம் ஆண்டுக்கு முன் தனக்கு ரூ.2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி, தற்போது தனது வருமானம் ரூ.10.98 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“சொத்து மதிப்பு அதிகரித்தது தொடர்பாக உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்பதே குமாரவேலின் கோரிக்கை.

