குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்: விவரங்களை வெளியிடாத தமிழக அரசியல் கட்சிகள்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள்: விவரங்களை வெளியிடாத தமிழக அரசியல் கட்சிகள்

2 mins read
38957e03-4343-4074-bfd2-15055dad9c08
ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. - கோப்புப் படம்: தினமலர்

புதுடெல்லி: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்களின் விவரங்களையும் அவர்களைத் தேர்வு செய்ததற்கான காரணங்களையும் தகுந்த முறையில் வெளியிடாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அரசியல் களத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கில், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான சரியான காரணங்களை 72 மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் 2020ல் உத்தரவிட்டிருந்தது.

வெற்றி வாய்ப்பை மட்டும் காரணியாகக் காட்டாமல், வேட்பாளரின் தகுதி, திறமையின் அடிப்படையிலேயே இந்நிபந்தனை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்ட 8,848 வேட்பாளர்களில், 1,405 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 191 வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த காரணங்களை அரசியல் கட்சிகள் முறையாகத் தெரிவிக்கவில்லை.

இதில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 72 வேட்பாளர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (55) இரண்டாம் இடத்திலும், கேரளா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மேலும், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் தேர்வை நியாயப்படுத்துவதற்காகத் தயாரித்த அறிவிப்புகளில் ஒரே மாதிரியான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் சாடியுள்ளது. அரசியல் கட்சிகளின் இந்த மெத்தனப் போக்கு, ஜனநாயகத்தின் மீதும் வாக்காளர்களின் உரிமை மீதும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்